பிரதமர் நரேந்திர மோடியை எந்தக் கூட்டணியாலும் வெல்ல முடியாது என்றும், அதனால்தான் தனித்தனியாக மோதிப் பார்த்த எதிர்கட்சிகள் தற்போது கூட்டமாக வந்து மோதுகின்றன என்று பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா கூறினார்.

பா.ஜ.க-வின் தேசிய அளவிலான 2 நாள் மாநாடு, தில்லி ராம்லீலா மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு பா.ஜ.க-வைச் சேர்ந்த உள்ளூர் பிரதிநிதிகள் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அந்த தேர்தலுக்கு கட்சித் தொண்டர்களை தயார்படுத்தும் விதமாக இந்த மாநாடு அமைந்துள்ளது. மாநாட்டின் முதல்நாள் நிகழ்வில் கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள் என சுமார் 12,000 பேர் கலந்து கொண்டனர்.

மாநாட்டைத் தொடங்கி வைத்து அமித் ஷா சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேசினார். வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும் என்றும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் தொண்டர்களிடம் அமித் ஷா வலியுறுத்தினார். அவர் பேசியதாவது:

வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக, எதிர்க்கட்சிகள் ஓரணியாகத் திரள்வதாகக் கூறப்படுகிறது. அந்த அணியில் உள்ள எந்தவொரு தலைவருக்கும் கொள்கையும் கிடையாது; அவர்களிடம் வளர்ச்சித் திட்டமும் கிடையாது. ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற வெறியே அவர்களை ஒன்றிணைத்துள்ளது. உலக அளவில் மிகவும் பிரபலமான தலைவரான பிரதமர் மோடியை பா.ஜ.க பெற்றுள்ளது. அவரது தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் பாதுகாப்பு, ஊழல் ஒழிப்பு, மக்கள் நலத் திட்டங்கள் என பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியைத் தவிர வேறு யாராலும் மத்தியில் வலிமையான ஆட்சியைத் தர முடியாது.

எனவே, பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறி, வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும். மத்தியில் மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால்தான், நாட்டின் வளர்ச்சியில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியும்.
பிரதமர் மோடியை எந்தக் கூட்டணியாலும் வெல்ல முடியாது; அவர், இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத சக்தி என்பதை எதிர்க்கட்சிகள் அறிந்து வைத்துள்ளன. பிரதமர் மோடிக்கு மக்கள் உறுதியோடு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். எனவே, வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைப்பது உறுதியாகி விட்டது.

கேரளத்தில் பா.ஜ.க ஆட்சி: கடந்த 2014-ஆம் ஆண்டில் மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபோது, 6 மாநிலங்களில் மட்டுமே பா.ஜ.க-வின் ஆட்சி நடைபெற்றது. தற்போது, 16 மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியில் உள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கேரளத்தில் பாஜகவின் ஆட்சி மலரும்.

பிரதமர் மோடியை 1987-ஆம் ஆண்டில் இருந்து எனக்குத் தெரியும். அவரது தலைமையில் நடைபெற்ற எந்தவொரு தேர்தலும் தோல்வியைத் தழுவியது கிடையாது. வரும் மக்களவைத் தேர்தலில், கடந்த 2014-ஆம் ஆண்டில் கிடைத்த தொகுதிகளைக் காட்டிலும் அதிகமான தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெறும். குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 73 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. வரும் மக்களவைத் தேர்தலில், அதைவிட அதிகமான தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெறும். அந்த மாநிலத்தில் பா.ஜ.க மீதான அச்சம் காரணமாகவே, சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கை கோத்துள்ளன.

ரபேல் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக ராகுல் காந்தியும், அவரது சகாக்களும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.

இளைஞர்களின் கனவு நிறைவேறியது: பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகத்தினருக்கு கல்வி-வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும்  மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியிருப்பதன் மூலம், கோடிக்கணக்கான இளைஞர்களின் கனவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் விரைவில் கட்டப்பட வேண்டும் என்பதில் பா.ஜ.க உறுதியாக உள்ளது. ஆனால், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த விவகாரத்தில் தீர்ப்பு விரைவில் வெளியாவதற்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை போட்டு வருகிறது என்றார் அமித் ஷா. மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.

Share