தமிழ் நாடு

மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை பரிசு – வரும் ஜனவரி 27-ல் பிரதமர் மோடி வழங்குகிறார் – பிரம்மாண்ட கூட்டத்திலும் பங்கேற்பு!

மதுரையில் ஜனவரி 27-ல் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்குகிறார். இதற்காக விமான நிலையம் அருகே 120 ஏக்கரில் நடக்கவுள்ள பிரம்மாண்ட கூட்டத்தில் 1 லட்சம் பேர் பங்கேற்பர் என மாநில பாஜக செயலாளர் ஆர்.ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.

மதுரை அருகே தோப்பூரில் ₹1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா ஜனவரி 27-ல் நடக்கவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பழனிசாமி மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

இவ்விழாவை மதுரை புறவழிச் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை அரங்கில் நடத்துவதா அல்லது எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்திலேயே நடத்துவதா என ஆலோசனை நடக்கிறது. எய்ம்ஸுக்கு அடிக்கல் நாட்டியதும், மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை மதுரையில் இருந்தே பிரதமர் தொடங்குகிறார். இதற்காக பிரம்மாண்ட கூட்டத்தை நடத்த பா.ஜ.க தலைமை திட்டமிட்டுள்ளது.

விமான நிலையம் அருகே மண்டேலா நகரில் தனியாருக்குச் சொந்தமான 120 ஏக்கர், பிரதமர் பங்கேற்கும் பொதுக் கூட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த இடத்தை பார்வையிட்ட பா.ஜ.க மாநிலச் செயலாளரும், பிரதமர் நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பாளருமான ஆர்.ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“மதுரையில் பிரதமர் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி ஜனவரி 27-ல் நடக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரைக்குப் பரிசாகத் தந்துவிட்டு மக்களைச் சந்திக்கிறார் பிரதமர். தமிழக அரசியல் களத்துக்கு மதுரை மிக ராசியான ஊர். இதனால் பிரதமர் தனது மக்களவைப் பொதுத்தேர்தல் பிரச்சாரத்தை மதுரையில் இருந்தே தொடங்குகிறார்.

மண்டேலா நகரில் அமையும் திடலுக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரிடப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளின் சார்பில் இக்கூட்டம் நடக்கவுள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்பர்” என்றார்.

Input Credits – The Hindu

Tags
Show More
Back to top button
Close
Close