மராட்டிய மாநிலம் மராத்வாடா பகுதியில் உள்ள சோலாப்பூர் நகரில் சோலாப்பூர் – உஸ்மானாபாத் இடையேயான 98 கி.மீ. தூர நான்கு வழிச்சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதேபோல்,₹1811 கோடி மதிப்பில் 30 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டம் உள்பட பல்வேறு நலத்திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பேசும்போது, “பொருளாதார ரீதியாக நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் நாடாளுமன்ற மக்களவையில் எனது அரசு மசோதா தாக்கல் செய்து சுமுகமாக நிறைவேற்றி இருப்பது அவர்களுடைய முன்னேற்றத்துக்கான வரலாற்றில் ஒரு சாதனை சரித்திரத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்து உள்ளது. நாடாளுமன்றத்தில் பொய்யை மட்டுமே பரப்புபவர்களுக்கு, இது சரியான பதிலடியாகவும் அமைந்துள்ளது. இந்த மசோதாவால் தலித்துகளோ அல்லது பழங்குடியின மக்களோ எந்த வகையிலும் பாதிக்கப்படமாட்டார்கள்” என்று குறிப்பிட்டார்.

Advertisement

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் முக்கிய வி.ஐ.பி.களுக்கு ஹெலிகாப்டர் வாங்குவதில் நடந்த ஊழல் குறித்து காங்கிரசை பிரதமர் மோடி பேசினார். ஊடகங்களில் வெளியான தகவல்களை சுட்டிக் காண்பித்து அவர் கூறும்போது, “அகஸ்டாவெஸ்ட் லேண்ட் ஹெலிகாப்டர் ஊழலில் கைதாகி உள்ள கிறிஸ்டியன் மைக்கேல், பிரான்சில் ரபேல் போர் விமானங்கள் தயாரிக்கும் நிறுவனத்துக்கு எதிராகவும் வேறொரு போட்டி நிறுவனத்துக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து உள்ளார்.

ரபேல் போர் விமானங்கள் தொடர்பாக குற்றச்சாட்டுகளை கூறி கூச்சலிடும் காங்கிரஸ் இந்த விவகாரத்தில் தன்னை பரிசுத்தமானவர்கள் என்று நிரூபிக்க வேண்டும். கிறிஸ்டியன் மைக்கேல் ஏன் ரபேல் அல்லாத வேறு போட்டியாளருக்கு ஆதரவாக பேசினார் ஏன் என்பதையும் காங்கிரசார் விளக்கவேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.இந்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Article Inputs from – Hindustan Times, Maalaimalar.

Share