சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் பல்வேறு கட்சியில் இருந்து விலகியவர்கள் அ.தி.மு.க-வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்திற்கு நன்மை செய்யக் கூடியவர்கள் மத்தியில் ஆட்சி அமைக்கவே அ.தி.மு.க ஆதரவு அளிக்கும் என்றார். நேற்று பிரதமர் கூட்டணி தொடர்பாக தமிழக கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் முதல்வரின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அவர் பேசுகையில், நாங்கள் கிராமத்தில் இருந்து வந்தவர்கள் என்பதால் கிராமத்தினரின் பிரச்சனையும் தெரியும், நகரத்தவரின் பிரச்னையும் தெரியும். தற்போது கிராமத்தினரின் பிரச்னையை தெரிந்து கொள்வதற்காகவே மு.க.ஸ்டாலின் கிராமம் கிராமமாக சென்று கொண்டிருக்கிறார். உள்ளாட்சி தேர்தல் நடத்தாததற்கு காரணம் தி.மு.க தான். அ.தி.மு.க அல்ல. மக்களின் தேவை என்ன என்பதை உணர்ந்து செயல்படுவதால் அ.தி.மு.க அரசுக்கு செல்வாக்கு கூடியுள்ளது. தமிழகத்துக்கு நன்மை செய்பவர்களுடன் தான் அதிமுக கூட்டணி அமைக்கும். தமிழகத்திற்கு நன்மை செய்யக் கூடியவர்கள் மத்தியில் ஆட்சி அமைக்கவே அதிமுக ஆதரவு அளிக்கும் என்றார்.

Advertisement

முன்னதாக தி.மு.க, பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்காது என்றும் மோடி ஒன்றும் வாஜ்பாய் அல்ல என்றும் ஸ்டாலின் பிரதமர் மோடியின் அழைப்பு குறித்து இன்று பேசியிருந்த நிலையில் முதல்வர் எடப்பாடியின் பதில் குறிப்பிடத்தக்கது. மேலும் பிரதமர் மோடி நேற்று பா.ஜ.க கூட்டணியில் சேர முந்தைய கூட்டணி கட்சியினருக்கு பொதுவாக அழைப்பு விடுத்த நிலையில் பிரதமர் மோடியின் அழைப்பை மனதில் வைத்தும் அதற்கு பச்சைக் கொடி காட்டும் வகையில் சூசகமாக முதல்வர் பேசியிருக்கலாம் எனவும் ஊடகங்களிலும் செய்திகள் வெளி வருகின்றன.

தமிழக நலனுக்காக அ.தி.மு.க அரசு கோரிக்கை வைத்த ஜல்லிக்கட்டு அனுமதிக்கான சிறப்பு சட்டம், காவிரி நீர் நடுவர் ஆணையம் அமைப்பு, சென்னை – சேலம் பசுமை சாலை திட்டம், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை உட்பட பல திட்டங்களை மத்தியிலுள்ள பா.ஜ.க அரசு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே  பிரதமர் மோடியை மனதில் வைத்தும் சூசகமாக முதல்வர் மேற்கண்டவாறு பேசியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Share