செய்திகள்

சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு சாதகமாக GST கவுன்சிலில் புதிய சலுகை – மோடி சர்க்கார் அதிரடி!

ஜி.எஸ்.டி வரி விதிப்பில் சிறு மற்றும் குறு வணிகர்களுக்கு புதிய சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜி.எஸ்.டி வரி செலுத்துவதற்கான வர்த்தக வரம்பு ₹20 லட்சத்தில் இருந்து ₹40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி கவுன்சிலின் 32-வது மற்றும் பட்ஜெட்டிற்கு முந்தையதுமான கூட்டம் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர் ஜெயகுமார் உள்ளிட்ட பல்வேறு மாநில அமைச்சர்களும் அதிகாரிகளும் பங்கேற்றனர். ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கைத்தறி பொருட்கள், ஜவ்வரிசி, தீப்பெட்டி, வெட் கிரைண்டர் உள்ளிட்டவற்றின் மீதான வரி விகிதத்தை குறைக்க வலியுறுத்தினார்.

மேலும், பம்பு செட்டுகள், வணிக சின்னமிடப்படாத நொறுக்கு தீனிகள், குளிர்பானங்கள், பிஸ்கட்டுகள், இயற்கை மற்றும் செயற்கை உரங்கள், கற்பூரம், காகிதப் பொருட்கள், மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றிற்கு வரி விலக்கு அளிக்குமாறு ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார். இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ஜி.எஸ்.டி தொகுப்பு சலுகைக்கான வரம்பு  ஒரு கோடி ரூபாயில் இருந்து ₹1.5 கோடியாக உயர்த்தப்படுகிறது என்றார்.

இந்த உயர்வு வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்ற அவர், இந்த சலுகை திட்டத்தின் கீழ் வருபவர்கள் காலாண்டிற்கு ஒரு முறை வரி செலுத்த வேண்டும் என்றும், ஆண்டிற்கு ஒரு முறை கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். சேவை துறையினருக்கும் இந்த திட்டத்தை அமல்படுத்த கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தொகுப்பு சலுகைக்கான பலன்கள், சேவை துறையினருக்கும் கிடைக்கும் என்று அவர் கூறினார்.

இதே போன்று சிறு, மற்றும் குறு தொழில் புரிவோர், வணிகர்கள் ஆகியோர் ஜி.எஸ்.டி வரி செலுத்துவதற்கான ஆண்டு வர்த்தக வரம்பு வடகிழக்கு மாநிலங்களில் 10 லட்ச ரூபாயில் இருந்து 20 லட்ச ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும், நாட்டின் பிற மாநிலங்களில் இது 20 லட்ச ரூபாயில் இருந்து 40 லட்ச ரூபாயாக உயர்த்தப்படுவதாக அருண் ஜெட்லி குறிப்பிட்டார். பெரு வெள்ளத்தால் சேதம் அடைந்த கேரளா மாநில அரசு, அடுத்த இரு ஆண்டுகளுக்கு ஒரு சதவிகித வரி விதித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ரியல் எஸ்டேட் மற்றும் லாட்டரி தொழிலுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பது குறித்து கவுன்சில் கூட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறிய அருண் ஜெட்லி, இதுபற்றி முடிவு எடுக்க அமைச்சர்கள் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags
Show More
Back to top button
Close
Close