செய்திகள்

வரலாற்றிலேயே முதன் முறையாக இலஞ்ச புகாரில் சிக்கிய சிபிஐ இயக்குநர், பதவியில் இருந்து அதிரடி நீக்கம் : பிரதமர், எதிர்கட்சி தலைவர், நீதிபதி கொண்ட மூவர் குழு உத்தரவு

சி.பி.ஐ இயக்குநர் அலோக் குமார் வர்மாவும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவும் சில மாதங்களுக்கு முன் ஒருவர் மீது ஒருவர் லஞ்சக் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்த மோதல் போக்கு உச்சகட்டத்தை எட்டியதை அடுத்து, இருவரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர். சி.பி.ஐ-யின் இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, தன்னை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அலோக் குமார் வர்மா மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அலோக் குமார் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

மேலும், அவர் கொள்கை முடிவுகள் எதையும் எடுக்கக் கூடாது; அன்றாட அலுவல்களை மட்டுமே கவனிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

பொதுவாக சிபிஐ இயக்குநரை பணியில் இருந்து மாற்ற வேண்டுமெனில், பிரதமர் தலைமையிலான உயர்நிலைக் குழுவின் ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியம். எனவே, அலோக் குமாருக்கு முழு அதிகாரம் வழங்குவது தொடர்பாக, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய உயர்நிலைக் குழு ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில், பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் இடம்பெறும் இந்த உயர்நிலைக் குழுவில் தனது பிரதிநிதியாக மூத்த நீதிபதி ஏ.கே.சிக்ரியை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நியமித்துள்ளார்.

இந்த உயர்நிலைக் குழு, வியாழக்கிழமை கூடி விவாதித்தது. அப்போது மல்லிகார்ஜுந கார்கே தவிர பெரும்பாலோருடைய ஆதரவுடன் சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து அலோக் குமார் வர்மாவை நீக்க முடிவு செய்யப்பட்டது. சிபிஐ வரலாற்றிலேயே இதுபோன்று ஒரு இயக்குநர் நீக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறையாகும்.

இந்நிலையில், தீயணைப்புத்துறை, குடிமை பாதுகாப்பு, ஊர்க்காவல்படை இயக்குநராக அலோக் வர்மா வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். பிரதமர் தலைமையிலான உயர்நிலைக்குழுவின் பரிந்துரையை ஏற்று ஊழல் கண்காணிப்புத்துறை நியமித்தது.

புதிய இயக்குநர் நியமிக்கப்படும் வரை சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் தொடருவார் என மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

சிபிஐ இயக்குநராக கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நியமிக்கப்பட்ட அலோக் வர்மாவின் 2 ஆண்டு கால பதவிக்காலம் வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Inputs from Dinamani

Tags
Show More
Back to top button
Close
Close