செய்திகள்

91,000 கிலோமீட்டர்களாக இருந்த தேசிய நெடுஞ்சாலைகள் மோடி சர்க்காரால் 1,30,000 கிலோமீட்டர்களாக விரிவுப்படுத்தப்பட்டுள்ளது

மகாராஷ்டிரா மாநிலம், சோலாபூர் நகரில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் 30 ஆயிரம் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமையும் என தெரிவித்தார். அப்போது பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தேசிய நெடுஞ்சாலை 211-ல் சோலாபூர்-ஒஸ்மானாபாத் நான்குவழி புதிய வழித்தடத்தை அவர் திறந்து வைத்தார். பாதாள சாக்கடை திட்டம், சாக்கடை நீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் தொடங்கி வைத்ததுடன், பிரதான் மந்திரி அவாஸ் யோஜானா திட்டத்தின் கீழ் 1811 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 30 ஆயிரம் வீடுகள் கட்டும் பணிக்கும் அடிக்கல் நாட்டினார்.

இதனை தொடர்ந்து விழாவில் பேசிய மோடி, எங்கள் அரசு வெறும் அடிக்கல் நாட்டுவதுடன் இருந்து விடாமல் அனைத்து திட்டங்களையும் விரைவாக முடித்து, நிறைவேற்றியுள்ளது என குறிப்பிட்டார். முன்னர் 91 ஆயிரம் கிலோமீட்டர்களாக இருந்த தேசிய நெடுஞ்சாலைகள் எங்கள் ஆட்சியில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கிலோமீட்டர்களாக விரிவுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசுகையில், ‘முந்தைய ஐக்கிய முற்போக்கு ஆட்சி காலத்தில் அரசு இயந்திரத்தில் இடைத்தரகர் கலாசாரம் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்தது. ஏழைகளின் உரிமைகள் பறிக்கப்பட்டன. இந்த நாட்டின் பாதுகாப்பிலும் அவர்கள் விளையாடி இருந்தனர். வி.வி.ஐ.பி-க்களின் பயணத்துக்காக நடந்த அகஸ்டா வெஸ்ட்லேன்ட் ஹெலிகாப்டர் ஊழலில் தொடர்புடைய வெளிநாட்டு இடைத்தரகரை நாங்கள் கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வந்திருக்கிறோம்.

விசாரணையின் போது அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளதாக செய்திகள் வருகின்றன. ரபேல் விவகாரம் தொடர்பாக கூட்டலிட்டு வரும் காங்கிரஸ் தலைவர்களில் யாருக்கு இடைத்தரகர் மைக்கேலுடன் தொடர்பு உள்ளது என்பதற்கு அவர்கள் பதிலளித்தாக வேண்டும். அவர்கள் செலவிட்ட ஒவ்வொரு பைசாவுக்கும் அவர்கள் கணக்கு காட்டியாக வேண்டும். ஊழலை வேரோடு சாய்ப்பதற்கான தூய்மை இயக்கத்தை நான் மேற்கொண்டுள்ளேன். மோடி வேறு மண்ணால் செய்யப்பட்டவன். அவனை மிரட்டவோ, விலைக்கு வாங்கிவிடவோ முடியாது. மக்களின் இந்த காவல்காரன் தூங்குவதோ இல்லை. தவறு செய்பவர்களை இருட்டில்கூட கண்டுபிடித்து விடுவேன். அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் வசை பாடட்டும்.

ஊழலுக்கு எதிரான எனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க மாட்டேன். ஓட்டு அரசியலுக்காக முந்தைய ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளில் நாங்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை நிறைவேற்றி தந்திருக்கிறோம். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு பத்து சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா மக்களவையில் சுமுகமாக நிறைவேறியதன் மூலம் பொய்களை பரப்புபவர்களுக்கு எதிராக எங்கள் ஆட்சியின் திட்டங்களுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தருவதை உணர்ந்து கொள்ளலாம். வரும் பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க. வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு’ என்றும் மோடி தெரிவித்தார்.

Inputs from Times of India

Tags
Show More
Back to top button
Close
Close