இந்தியா

திருவாபரண நிகழ்ச்சியில் பந்தள மன்னர் குடும்பத்தினரை கைது செய்ய பினராயி விஜயன் திட்டம்? ஊடகங்களில் பரவும் செய்திகளால் கேரளாவில் பரபரப்பு

மகர விளக்குக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில், மேலும் சில பெண்களை சபரிமலையில் தரிசனம் செய்ய வைக்க, கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான, பினராயி விஜயன் திட்டமிட்டுள்ளதாக, தகவல் பரவியுள்ளது. இதை தடுக்க, கூடுதல் பக்தர்கள் வந்து, பம்பை முதல் சன்னிதானம் வரை தங்கியுள்ளனர். இந்த நிலையில் ஆண்டுதோறும் பந்தள மன்னர் குடும்பத்தினரால் நடத்தப்படும் திருவாபரண நிகழ்ச்சியில் மன்னர் பிரதிநிதி கைது செய்யப்படுவார் என சமூக ஊடக செய்திகளால் கேரளாவில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

கேரளாவில், பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், இரண்டு பெண்களை தரிசனம் செய்ய வைத்து, கோவில் ஐதீகத்தை தகர்த்த, முதல்வர் பினராயி விஜயன், மகர விளக்குக்கு முன், மேலும் சில பெண்களை தரிசனம் செய்ய வைக்க திட்டமிட்டுள்ளதாக, தகவல் பரவியுள்ளது. இதை தடுப்பதற்காக, சபரிமலையில் ஏராளமான பக்தர்கள் குவிகின்றனர். மாளிகைப்புறம் கோவிலின் கீழ் பகுதியில், தினமும் நடக்கும் பஜனையில் பங்கேற்போர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

போராட்டத்தை ஒருங்கிணைக்க, 60 பேர், பம்பை முதல், சன்னிதானம் வரை, 13 இடங்களில் தங்கியுள்ளனர். பெண்கள் வந்தால், உடனடியாக அடுத்தவர்களுக்கு தகவல் கொடுக்கின்றனர். மகர விளக்கு சீசன் முடிந்து, நடை அடைக்கும் வரை, இவர்கள் இங்கு தங்கியிருப்பர். கடைசி நாட்களில், ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் வர இருப்பதாக கூறப்படும் நிலையில், சன்னிதானத்திலும், சரண பாதைகளிலும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் போராட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கும் விஷயத்தில், பந்தள மன்னர் குடும்பத்துக்கும், அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இதனால், ‘திருவாபரண பவனியில், அரசு ஆதரவு தரப்பினரால், மன்னர் பிரதிநிதிக்கு பிரச்னை ஏற்படலாம்’ என, உளவுத்துறை கூறியிருந்தது.

மேலும், ‘திருவாபரணங்கள் அரண்மனைக்கு திரும்பி வராது; மன்னர் பிரதிநிதி, வழியிலேயே சிறை வைக்கப்படுவார்’ என்றெல்லாம், சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. எனவே, கூடுதல் பாதுகாப்பு கேட்டு, அரண்மனை நிர்வாகம் சார்பில், கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணை நாளை நடக்க உள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close