பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கும் மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் நோக்கில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்காக பிரதமர் மோடி சர்க்காரால் கொண்டுவரப்பட்ட மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை இரவு நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவுக்கு ஆதரவாக 323 எம்.பி.க்கள் வாக்களித்தனர்.

தற்போது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு மொத்தமாக 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இடஒதுக்கீட்டு வரம்பை 60 சதவீதமாக அதிகரிப்பதுடன், பொதுப்பிரிவில் பின்தங்கிய மக்களுக்கு கூடுதலான அந்த 10 சதவீதத்தை ஒதுக்கும் வகையிலான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.
மக்களவையில் இந்த மசோதாவை, சமூகநலத்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். அதன் மீது 4.5 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் மசோதாவை ஆதரித்தும், எதிர்த்தும் பேசினர். குறிப்பாக, அ.தி.மு.க, சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ், சிவ சேனை உள்ளிட்ட கட்சிகள் மசோதாவை ஆதரித்தன.
பின்னர் விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் தவார்சந்த் கெலாட் பேசினார். 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் யாரேனும் வழக்கு தொடுத்தால் என்னவாகும் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், உச்சநீதிமன்றம் இந்த மசோதாவை ஏற்றுக் கொள்ளும் நம்பிக்கை இருப்பதாக அவர் தெரிவித்தார். இடஒதுக்கீட்டு மசோதா, நாட்டின் நலனை கருத்தில் வைத்து கொண்டு வரப்படுகிறது என்றும், இது வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டது. இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க எம்.பி.தம்பிதுரை  அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அப்போது அவையில் இருந்தனர். அரசமைப்புச் சட்டத்தின் 15-வது பிரிவில் திருத்தம் மேற்கொள்ள அந்த மசோதா வகை செய்கிறது. பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கும் மக்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கு ஏதுவாக, மாநிலங்களவையில் கூட்டத்தொடர் ஒருநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா மீதான தீர்மானம் தொடர்பாக பிரதமர் பேசுகையில் “சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் நீதியை  முன்னெடுத்துள்ளோம். ஜாதிகளைக் கடந்து, அனைத்து ஏழை மக்களுக்கும் கௌரவமான வாழ்வை  உறுதி செய்யவும், அவர்களுக்கு அனைத்து வாய்ப்புகளும் கிடைக்கவும் பெரு முயற்சி மேற்கொண்டுள்ளோம்” என்றார்.

Share