பிரதமர் நரேந்திர மோடி  ஜார்கண்ட், ஒடிசா மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.ஒடிசா மாநிலம் பரிபடாவில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அப்போது பேசிய  அவர், ரபேல் விமானங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மிக தெளிவான விளக்கங்களை கொடுத்து அருமையான வாதங்களை முன்வைத்தார்.நாட்டின் முதல் பெண் ராணுவ அமைச்சரான  அவர் தனது திறமையை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தியதை காணமுடிந்தது.
இதற்காக நிர்மலா சீத்தாராமனை நான் பாராட்டுகிறேன்.ராகுல் காந்தியை பொறுத்த வரை இந்த நாட்டை தவறான முறையில் வழிநடத்தி செல்ல முயற்சிக்கிறார். நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் அரசியல் விளையாட்டுக்களை புகுத்த பார்க்கிறார்.பாராளுமன்றத்தை தனது பொழுதுபோக்குக்காக பயன்படுத்தி உள்ளார். இதில் அவருடைய குழந்தை தனம் மீண்டும் வெளிப்பட்டிருக்கிறது. அவருடைய நோக்கத்தை நிர்மலா சீத்தாராமன் வெளிப்படுத்தினார்.
2004-ல் இருந்து 2014 வரை காங்கிரஸ் ஆண்டு கொண்டிருந்த நேரத்தில் ராணுவ ஆயுத கொள்முதலில் எத்தனை சதிகள் நடந்துள்ளன என்பதை நாங்கள் இப்போது வெளிப்படுத்தி வருகிறோம்.இதனால் அவர்கள் ஆத்திரம் அடைந்து நம்மீது பாய்கிறார்கள். ஒரு வீட்டில் இருக்கும் பாதுகாவலரை வெளியேற்றி விட்டு திருட வேண்டும் என்ற திட்டத்துடன் அவர்கள் வருகிறார்கள். அதற்கு நாங்கள் இடம் அளிக்கமாட்டோம்.
ஹெலிகாப்டர் ஊழலில் இடைத்தரராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் என்ன செய்தார் என்ற உண்மை இப்போது வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது.
காங்கிரசின் மூத்த தலைவர்கள் எல்லாம் அவரோடு தொடர்பில் இருந்திருக்கிறார்கள்.பிரதமராக இருக்கும் எனக்கு தெரியாமல் எந்த ஒரு கோப்பும் நகர முடியாது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் இடைத்தரகர்கள் தான் எல்லா வேலையையும் செய்திருக்கிறார்கள். அவர்கள் செய்த தவறுகளை நாம் வெளிப்படுத்துவதுடன் அதை திருத்தும் பணிகளை செய்து வருகிறோம். சட்டத்தை மீறுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்’ என்று கூறியுள்ளார்.

Share