தமிழ் நாடு

பொது பிரிவினருக்கும் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு முடிவு : மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் சிந்தனையை செயல்படுத்தும் மோடி சர்க்கார்

தமிழக அரசியல் தலைவர்களிலேயே ஏழைப்பங்காளன் என தன் குணத்தால் அறியப்பட்டவர் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். சாதாரண நரிக் குறவர்களிலிருந்து உயர்ந்த சாதியினர் வரை அனைவருக்கும் பொதுவானவராகவும், அனைவரின் உள்ளங்களிலும் நிரம்பிய இதயக் கனியாகவும் இன்றளவும் நினைவில் வாழ்கிறார். சிறந்த மனிதாபிமானியாக திகழ்ந்த அவர் திராவிட சிந்தனையாளர்களின் வழியில் அரசியல் செய்திருந்தாலும், ஆட்சி நடத்தி இருந்தாலும் அவைகளிடமிருந்து மாறுபட்டு சாதிகளுக்கு அப்பாற்பட்ட மனிதனாக தன்னை நிலைநாட்ட அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் இன்றும் காலத்தால் மறக்க முடியாதவை.

இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் பலன்களை முழுமையாக உணர்ந்த அவர், அந்த பலன்கள் உண்மையான ஏழைகளுக்கு சென்று சேர வேண்டும் என விரும்பி முதன் முதலாக தமிழகத்தில்

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 31 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்திய பெருமை அவரையே சாரும். 50 சதவீதத்தைத் தாண்டக்கூடாது என்று அரசியல் சாசனம் அழுத்தம் திருத்தமாக கூறிய போதிலும் அகில இந்திய அளவில் தனக்கிருந்த செல்வாக்கின் மூலம் ஆதிதிராவிடர்கள், பழங்குடிகள் உட்பட பிற்பட்டவர்களுக்கும் சேர்த்து மொத்த இட ஒதுக்கீடு சதவீதத்தை 60 சதவீதமாக முதன் முதலாக விஸ்தரிப்பு செய்தவர் அவர்தான். கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட அந்த சதவீதத்தில் அனைத்து சாதியிலுமுள்ள ஏழைகள் பயன்பெற வேண்டும் என்றும் சிந்தித்த அவர் அதனை செயல்படுத்தும் விதத்தில் முயற்சிகள் எடுத்தபோது திராவிடர் கழகமும், தி.மு.க-வும் மிகக் கடுமையான ஆட்சேபங்களை தெரிவித்ததும் அல்லாமல் எம்.ஜி.ஆர் பிற்படுத்தபட்டோருக்கு எதிரானவர், சமூக நீதிக்கு எதிரானவர் எனக்கூறி மாபெரும் பிரச்சாரத்தில் முனைந்தனர். சட்டரீதியான தடைகளை ஏற்படுத்தவும் முனைந்தனர். மாநிலமெங்கும் எம்.ஜி.ஆர் முற்பட்ட சாதிகளின் ஆதரவாளர், இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளுக்கு எதிரானவர் என்று தி.க-வும், தி.மு.க-வும் விஷமப் பிரச்சாரம் செய்தனர். சும்மாயிருந்த குளவிக் கூட்டில் கை வைத்துவிட்டார் எம்.ஜி.ஆர் என பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டன. இதனால் அனைத்து சாதி ஏழைகளுக்கும் பயனளிக்கும் அவருடைய முயற்சி, சிந்தனை செயல் கூடாமல் போயிற்று.

இந்த நிலையில், அனைத்து சாதிகளிளுமுள்ள ஏழை மக்களின் நீண்ட நாளைய மனிதாபிமான கோரிக்கையை, எம்.ஜி.ஆர் அவர்களின் சிந்தனையை, அவர் எடுத்துக் கொண்ட முயற்சியை பிரதமர் மோடியின் அரசு செயல்படுத்தவுள்ளது. மோடி சர்காரின் அமைச்சரவை நேற்று அனைவருக்கும் சம நீதிவழங்கும் வரலாறு காணாத முடிவை எடுத்துள்ளது. அதன்படி அரசு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி நிலையங்களில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு தொடர்பான அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு மத்திய கேபினட் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இந்த திருத்தப்படி ஆண்டுக்கு ₹8 இலட்சம் வருமானத்துக்கு உட்பட்ட உயர் சாதியிலுள்ள ஏழைகள் மற்றும் வருவாய் குறைந்த பிரிவினருக்கு பொருளாதார அடிப்படையில் அரசு வேலை வாய்ப்பு, கல்வி நிலையங்களில் 10 சதவீத இட ஒதுக்கீட்டு சலுகை கிடைக்க வகை செய்ய மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. மோடி சர்காரின் இந்த முடிவால் நாடெங்கிலும் உள்ள, இதுவரை சமூக நீதி மறுக்கப்பட்ட இலட்சக்கணக்கான உயர்சாதியை சேர்ந்த ஏழைக் குடும்பங்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளி ஏற்றப்பட்டுள்ளது .

இதற்கான அரசியல் சட்ட திருத்தம் மக்களவையில் முன்வைக்கப்படும் என தெரிகிறது. இந்த சட்ட திருத்தம் அமலுக்கு வரும்போது தமிழகத்தில் உள்ள ஐயங்கார், ஐயர், சைவ வெள்ளாளர்கள் என்று அழைக்கப்படும் சைவ முதலியார், சைவ பிள்ளை, கார்காத்த பிள்ளைமார், நாட்டுக் கோட்டை செட்டியார், ஆரிய வைசிய செட்டியார் உட்பட சில செட்டியார் பிரிவினர், கம்மவார் நாயுடு மற்றும் ரெட்டியார் வகுப்பினர், வெள்ளாளர்கள் உட்பட தமிழகத்தை சேர்ந்த பல பிரிவினர்களில் உள்ள ஏழைகள், குறைந்த வருவாய் பிரிவினர் பயனடைவார்கள்.

Tags
Show More
Back to top button
Close
Close