பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக இன்று (செவ்வாய்க் கிழமை) நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.
நாடு முழுவதும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித் மற்றும் பழங்குடியினருக்கு என சுமார் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.ஆனால் பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவது இல்லை. எனினும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவை சேர்ந்தவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
இதைத்தொடர்ந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கும் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை சபை கூட்டத்தில் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) அரசியல் சாசன திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.
இதற்காக அரசியல் சாசனத்தின் 15 மற்றும் 16-வது பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.இதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை பொதுப்பிரிவினர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு பெற முடியும். அதன்படி ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு குறைவான வருமானம் மற்றும் 5 ஏக்கர் வரை நிலம் கொண்டிருக்கும் பொதுப்பிரிவினர் இந்த இடஒதுக்கீடு பெற தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
Share