தமிழ் நாடு

பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 11 லட்சம் குடும்பங்களுக்கு இலவச காஸ் இணைப்பு!

பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 11 லட்சம் குடும்பங்களுக்கு இலவச கியாஸ் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

நம் நாட்டில் ஏழைகளுக்கு சமையல் எரிவாயு இணைப்பு கிடைப்பது கடினமாக உள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர்கள், நகர்ப்புற மற்றும் பாதி நகர்ப்புறங்களிலும், நடுத்தர மற்றும் உயர் வருவாய் பிரிவினருக்குமே கிடைத்து வந்துள்ளது. படிம எரிபொருட்களில் சமைப்பதால், உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படும். இவ்வாறு படிம எரிபொருட்களில் சமைப்பதனால், இந்தியாவில் 5 லட்சம் மரணங்கள் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இம்மரணங்களில் பெரும்பாலானவை, இதய நோய், பக்கவாதம், நுரையீரல் நோய் மற்றும் புற்றுநோய் காரணமாக ஏற்படுபவை. வீட்டினுள் ஏற்படும் காற்று மாசு காரணமாகவும் இத்தகைய நோய்கள் ஏற்படுகின்றன. ஏராளமான குழந்தைகள் சுவாச நோயில் பாதிக்கப்படுகின்றனர். சமையலறையில் வெளிப்படும் புகை, ஒரு மணி நேரத்துக்கு 400 சிகரெட் புகைப்பதற்கு சமமாகும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவது, நாடெங்கும் இணைப்பு வழங்க உதவும். இத்திட்டம் பெண்களுக்கு அதிகாரம் அளித்து, அவர்களின் உடல் நலனை பாதுகாக்கும். அவர்களின் வேலைப்பளுவை குறைத்து, சமையல் நேரத்தையும் குறைக்கும். சமையல் எரிவாயு வழங்குவதன் மூலம், ஊரக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். அந்த வகையில் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 2018 டிசம்பர் மாதத்துக்குள் நாடு முழுவதும் 6 கோடி கியாஸ் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திலேயே அந்த இலக்கு எட்டப்பட்டது. இந்த நிலையில் இந்த திட்டம் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதன்படி வருகிற மார்ச் மாதத்துக்குள் நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு 2 கோடி இலவச சமையல் கியாஸ் இணைப்புகள் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும் இதுவரை 27 லட்சத்து 87 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 25 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மேலும் 11 லட்சம் இலவச இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பெண்களின் குடும்ப மாத வருமானம் 10 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் பயனடைய விரும்புபவர்கள் வரும் மார்ச் மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆதார் அட்டை, ஸ்மார்ட் ரே‌ஷன் அட்டை, வங்கி பாஸ்புத்தகம், 3 புகைப்படங்கள் அடங்கிய ஆவணங்களை அருகில் உள்ள கியாஸ் ஏஜென்சியில் வழங்கி இத்திட்டத்தின் கீழ் இலவச இணைப்பை பெறலாம். கிராமப் பகுதிகளில் இந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஊழியர்கள் வீடுதோறும் விண்ணப்ப படிவங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.

http://www.pmindia.gov.in/ta/news_updates/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%87/

http://www.pmujjwalayojana.in/

Tags
Show More
Back to top button
Close
Close