தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 2018 அக்டோபர் மாத நிலவரப்படி 119.2 கோடியாக அதிகரித்துள்ளது என டிராய் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் புள்ளிவிவரத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த அக்டோபர் நிலவரப்படி தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 119.2 கோடியாக உள்ளது. கடந்த அக்டோபரில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே 1.08 கோடி செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளன.

அதேசமயம், இதர தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களான வோடஃபோன் ஐடியா, பார்தி ஏர்டெல், டாடா டெலிசர்வீசஸ், எம்டிஎன்எல் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகியவை 1.01 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. அக்டோபரில் தனி நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ மட்டும் 1 கோடி வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. பி.எஸ்.என்.எல் 3.66 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளதாக டிராய் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை சீனாவை விட சற்று குறைவாக இருந்தாலும் மிக குறுகிய காலத்தில் இந்தியாவில் செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிவேகத்தில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share