செய்திகள்

கிண்டலடித்த டிரம்ப்பிற்கு இந்தியா தக்க பதிலடி!

ஆப்கானிஸ்தானில் நூலகம் கட்டுவதால் என்ன பயன் என பிரதமர் மோடியை, அமெரிக்க அதிபர் டிரம்ப் கிண்டலடித்துள்ளார்.இதை நிராகரிக்கும் வகையில், ஆப்கானிஸ்தானை உருமாற்றுவதில் வளர்ச்சித் திட்டங்களுக்கான தங்களது உதவி முக்கிய பங்காற்றும் என இந்தியா பதிலளித்துள்ளது.
புத்தாண்டின் முதல் அமெரிக்க அமைச்சரவைக் கூட்டம் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. அப்போது வெளிநாடுகளின் பாதுகாப்புக்கு அமெரிக்கா செலவிடுவதைக் குறைத்துக்கொள்ளும் வகையிலான தமது நடவடிக்கைகளை டிரம்ப் நியாயப்படுத்தி பேசினார்.
ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புக்கு இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான் ஆகிய அண்டை நாடுகள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.இதற்காக அமெரிக்கா பில்லியன் கணக்கான டாலர்கள் செலவிடும்போது, மற்ற நாடுகள் செலவிடுவதாகக் கூறும் தொகை மிகவும் அற்பமானது எனக் கூறும் வகையில் பேசிய டிரம்ப், இந்தியப் பிரதமர் மோடியை குறிப்பிட்டுக் காட்டினார்.ஆப்கானிஸ்தானில் நூலகம் கட்டுவதைப் பற்றி தொடர்ச்சியாக பிரதமர் மோடி தம்மிடம் கூறியதாக தெரிவித்த டிரம்ப், அதற்காக நாம் நன்றி என்று கூறவேண்டுமாம் எனக் குறிப்பிட்டார்.
ஆனால் நூலகங்களை ஆப்கானிஸ்தானில் யார் பயன்படுத்தப் போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை என கிண்டலடித்தார்.
சமூக வளர்ச்சித் திட்டங்களாக சிறுசிறு நூலகங்களை இந்தியா ஆப்கானிஸ்தானில் உருவாக்கும் என்றாலும், அந்நாட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு உதவும் பெரிய அளவிலான உள்கட்டமைப்புத் திட்டங்களிலேயே அதிக முதலீடு செய்வதாக இந்திய அரசு வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு அளிக்கும் உதவிகள் அந்நாட்டை ஸ்திரத்தன்மை கொண்டதாகவும் பொருளாதார அதிகாரம் பெற்றதாகவும் மாற்ற உதவும் என அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன. ஆப்கானிஸ்தான் புதிய நாடாளுமன்ற கட்டிடம், அந்நாட்டில் கட்டப்பட்ட சல்மா அணை, 218 கிலோமீட்டர் நீள சாலை போன்ற இந்தியாவின் திட்டங்களையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆப்கானிஸ்தானை உருமாற்றுவதில் வளர்ச்சித் திட்டங்களுக்கான உதவி முக்கிய பங்காற்றும் என இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Tags
Show More
Back to top button
Close
Close