மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கமல்நாத்தை  முதல்வராக நியமனம் செய்ததற்கு சீக்கியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 1984-இல் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பின்னர் சீக்கியர்களுக்கு எதிராக பெரும் கலவரம் வெடித்தது. ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது காங்கிரஸ் கையில் கழுவமுடியாத கரையாக தொடர்கிறது. இதில் கமல்நாத் பங்கும் உள்ளது என தெரிவிக்கப்படுகிறது. அவருக்கு எதிராக அமெரிக்காவிலும் வழக்கு நடந்தது.

மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர்  பேசுகையில், டெல்லியில் 1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலை வழக்கில் தொடர்புடைய கமல்நாத்தை மத்திய பிரதேச முதல்வராக பதவியில் அமர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது, அவருக்கு விரைவில் நீதிமன்றம் தண்டனை வழங்கும் என்றார்.  இப்போது இவ்விவகாரத்தில் காங்கிரஸ் மீது கடுமையான தாக்குதலை முன்வைத்துள்ள பிரதமர் மோடி, சீக்கிய கலவரக் குற்றவாளியை காங்கிரஸ் முதல்வராக்கியுள்ளது என்று கூறியுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் கட்சி கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஆயிரக்கணக்கான சீக்கியர்களை கொன்ற வரலாற்றில் தொடர்புடையவர்கள், குற்றவாளிகளை முதல்வராக்கி வருகிறார்கள். பஞ்சாப் மற்றும் ஒட்டுமொத்த தேசமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காங்கிரஸ் அரசியல் காரணத்திற்காகதான் பாகிஸ்தானை எச்சரிக்கிறது என்று பிரதமர் மோடி, சித்து பாகிஸ்தான் சென்றதையும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில  மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் பகுதியில் கர்தார்பூர் வழித்தடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாப் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து கலந்து கொண்டார். அங்கு காலிஸ்தான் ஆதரவு ஆர்வலர் கோபால் சிங் சாவ்லாவுடன் சித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியானது. புகைப்படத்தை சாவ்லா தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனால் சித்துவுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தது. பாகிஸ்தான் மண்ணில் இது போன்ற தவறான யுக்திகளுடன் செயல்படுவதை புறந்தள்ளிவிட முடியாது” என்று பா.ஜ.க அப்போதே தெரிவித்திருந்தது  குறிப்பிடத்தகக்கத்து.

Share