கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் தரிசனம் செய்வது தடை செய்யப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் நடை திறக்கப்பட்டது. அங்கு பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு ‘144’ தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் ஜனவரி 2 ஆம் தேதி அதிகாலையில் 2 பெண்கள் பலத்த பாதுகாப்புடன் சபரிமலை சென்றனர். கோழிக்கோடு மாவட்டம் கோயிலாண்டியை சேர்ந்த கல்லூரி பேராசிரியையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டருமான பிந்து (வயது 42) மற்றும் மலப்புரத்தின் அங்காடிபுரத்தை சேர்ந்த ரேஷன் கடை ஊழியரான கனகதுர்கா (44) ஆகிய இருவரும் மணியளவில் அய்யப்பனை தரிசித்தனர். பிந்து, கனகதுர்கா ஆகிய இருவரும் சபரிமலையில் அய்யப்பனை தரிசித்ததை முதல்வர்  பினராயி விஜயன் உறுதி செய்தார்.
சபரிமலையில் தரிசனம் செய்த பெண்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.  இதனையடுத்து  பல இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்து வருகிறது. பந்த் காரணமாக கேரளாவில் நடக்க உள்ள பள்ளி அரையாண்டு தேர்வுகள் மற்றும் கல்லூரி தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. பந்தை தொடர்ந்து கேரளா செல்லும் தமிழக வாகனங்கள், எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.  கேரளா செல்லும் கர்நாடக மாநில அரசு பஸ்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கோவில் தந்திரியால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த முடியவில்லை என்றால் ராஜினாமா செய்ய வேண்டும். சபரிமலை கோவிலுக்கு பெண்கள் செல்ல விரும்பினால் அவர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்பதில் மிகவும் உறுதியாக உள்ளோம் என கேரளா முதல்வர்  பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.இந்நிலையில்,  கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் சட்டம், ஒழுங்கு தொடர்பாக அறிக்கை அளிக்க கேரள ஆளுநர் சதாசிவம் உத்தரவிட்டுள்ளார். சபரிமலை விவகாரம் தொடர்பாக, கேரளாவில் நடைபெறும் தொடர் போராட்டம் காரணமாக சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரை அடுத்து கேரள ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  அனைத்து தரப்பு மக்களும் அமைதியாக இருப்பதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்த வேண்டும் என ஆளுநர் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
Share