சிறப்பு கட்டுரைகள்

2019 தேர்தலில் மக்களின் அன்பு, ஆசிர்வாதத்துடன் அவர்கள் சார்பில் நான் போட்டியிடுகிறேன்: மக்கள்தான் வெற்றி பெறுவார்கள் – பிரதமர் மோடி மனம் திறந்து பேட்டி

பிரதமர் மோடி பத்திரிக்கையாளர்களை நேரடியாக சந்தித்து பேசவில்லை என சமீபகாலமாக ஊடகங்கள் சில குற்றம் சாட்டி வந்தன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பிரதமர் மோடி பத்திரிக்கைகளை கண்டு பயப்படுவதாக கடந்த ஒரு வாரகாலமாக குற்றம் சாட்டி வந்தார். இந்த நிலையில் புத்தாண்டு தினமான இன்று ஏ.என்.ஐ செய்தி நிறுவன ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷுக்கு பிரதமர் மோடி அளித்துள்ளார். ஓய்வில்லாமல் தொடர்ந்து பணியாற்றி வரும் மோடி அவர்கள், சில கால இடைவேளைக்குப்பின்னர் இன்று நேரில் பத்திரிக்கையாளருக்கு பேட்டி அளித்துள்ளதால் அவர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் பல்வேறு ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் முக்கியத்துவம் தரப்பட்டு வேகமாக பரப்பப்பட்டு வருகின்றன. இந்த பேட்டியில் மிகவும் சர்ச்சைக்குரிய இராமர் கோவில் விவகாரம், ரூபாய் மதிப்பு மாற்ற விவகாரம், சர்ஜிக்கல் நடவடிக்கை, உர்ஜித்படேல் ராஜினாமா விவகாரம்,, 2019 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி உள்ளிட்டவை குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் விரிவாக மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.

ஏ.என்.ஐ செய்தி நிறுவன ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷுக்கு பிரதமர் மோடி அளித்துள்ள பேட்டியில் பின்வருமாறு கூறியுள்ளார் – “அதில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் சாமானியர் மற்றும் மெகா கூட்டணி இடையே தான் போட்டி. எங்களுக்கும் வேறு யாருக்கும் போட்டி கிடையாது.”

நான் சாமானியரின் பிரதிபலிப்பு தான். சாமானிய மக்களின் சார்பாக நான் போட்டியிட உள்ளேன். இத்தனை வருடமாக ஒரு குடும்பம்தான் நாட்டை ஆண்டு வந்தது. இப்போது மக்கள்தான் ஆண்டு வருகிறார்கள். 2019 தேர்தலில் மக்கள்தான் வெற்றி பெறுவார்கள். மெகா கூட்டணி தோல்வியை தழுவப் போகிறது என்று கூறினார்.

ராமர் கோவில் விவகாரம் தொடர்பாக அவர் கூறுகையில் “ராமர் கோயில் விவகாரத்தில், நீதித்துறை முடிவெடுக்க காங்கிரஸ் அனுமதிக்க வேண்டும். அதற்கு தடைக்கல் போடக்கூடாது. இந்த விவகாரத்தை அரசியல் ரீதியில் எடை போடக்கூடாது. தேசிய நலன் மற்றும் அமைதிக்காக, அயோத்தி வழக்கில், கோர்ட்டில் தடை ஏற்படுத்துவதை நிறுத்த வேண்டும்” என காங்கிரஸ் கட்சிக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

ராமர் கோயில் வழக்கில் விரைவாக தீர்ப்பு வர, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து வழக்கறிஞர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும். கோர்ட்டில் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் தடையை ஏற்படுத்துவதை நிறுத்தி விட்டு, நீதித்துறை சுயமாக முடிவு எடுக்க அனுமதிக்க வேண்டும். ராமர் கோவில் கட்ட அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்று சங்பரிவார் அமைப்புகள் வலியுறுத்தி வரும் நிலையில், அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு இப்பிரச்சனையில் தீர்வு காணப்படும் என்று ஏற்கனவே 2014 பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதை நினைவு கூர்ந்து பிரதமர் சுட்டிக்காட்டினார். நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்த பின்பு, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

உர்ஜித் படேல் ராஜினாமா விவகாரம் குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவன ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷ் கேள்வி எழுப்பியதற்கு பிரதமர் பதில் அளிக்கையில் “ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த உர்ஜித் படேல், தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாகவும், அதனை ஏற்று கொள்ள வேண்டும் என கூறினார். பதவி விலக போவதை 6 ,7 மாதங்களுக்கு முன்னரே என்னிடம் சொன்னார். இதனை தற்போது முதன்முறையாக சொல்கிறேன். இதனை எழுத்துப்பூர்வமாகவும் அளித்துள்ளார். அரசியல் நெருக்கடி என்ற கேள்விக்கே இடமில்லை. ரிசர்வ் வங்கி கவர்னராக சிறப்பாக பணியாற்றினார்.”

பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் மேலும் பதில் கூறுகையில் “காஷ்மீரின் யூரியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயீர்நீத்த நம் இந்திய வீரர்கள் உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு, எனக்கு அதிக கோபமும், உணர்வும் ஏற்பட்டது. இதனால் தான் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது.
தாக்குதலில் ஈடுபட்ட வீரர்களிடம், வெற்றியோ தோல்வியோ அதனைப் பற்றி கவலைப்பட வேண்டாம். சூரிய உதயத்திற்கு முன்னர் திரும்பி விட வேண்டும் என்றேன். இரவு முழுவதும் விழித்திருந்து தாக்குதல் குறித்த உடனடி தகவல்களை பெற்றுக் கொண்டிருந்தேன். இது பெரிய ஆபத்தான நடவடிக்கை என்பது தெரியும். அரசியல் ரீதியாக எனக்கு ஏற்படும் நெருக்கடி குறித்து கவலையில்லை. நமது வீரர்களின் பாதுகாப்பே எனக்கு கவலை ஏற்படுத்தியது.

நாட்டிற்காக உயிரை தியாகம் செய்ய தயாராக உள்ள வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை நான் விரும்பவில்லை. தாக்குதலில் ஈடுபடும் வீரர்கள் கவனமுடன் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தேவையான சிறப்பு பயிற்சிகள் சில மணிநேரங்களில் வழங்கப்பட்டன. தேவைப்படும் சாதனங்களும் வழங்கப்பட்டன. வீரர்கள் எல்லை தாண்டிய போது, பதற்றம் ஏற்பட்டது. காலையில், சூரிய உதயத்திற்கு பின்னரும், தகவல் கிடைப்பது தடை பட்டது. அப்போது எனக்கு பதற்றம் அதிகரித்தது.  இந்த நேரம், மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்தது. அப்போது, தாக்குதல் நடத்த சென்றவர்களில் 3 குழுவினர், பாதுகாப்பாக திரும்பிவிட்டனர். இதனால் கவலைப்பட வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். கடைசி வீரரும் நலமாக திரும்பும் வரை எனக்கு நிம்மதி ஏற்படாது என அதிகாரிகளிடம் தெரிவித்தேன். சர்ஜிக்கல் தாக்குதலை அரசியலாக்கவில்லை.

எதிர்க்கட்சிகள் தான், பாகிஸ்தான் குரலில் சந்தேக குரல் எழுப்பி அரசியலாக்கின. நாட்டு மக்களிடம் சர்ஜிக்கல் தாக்குதல் குறித்து தகவல் தெரிவிப்பதற்கு முன், பாகிஸ்தானிடம் தெரிவிக்கப்பட்டது. சர்ஜிக்கல் தாக்குதல் குறித்து ராணுவ அதிகாரி நாட்டு மக்களிடம் விளக்கி கொண்டிருந்தார்.  துரதிர்ஷ்டவசமாக, சில கட்சி தலைவர்கள் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பினர். இவ்வாறு பேசுவது பாகிஸ்தானுக்கு தேவையானது தான். ஆனால், பாகிஸ்தான் சொன்னதை, அதற்கு முன்னரே, இங்கிருந்தவர்கள் கூறினர். தங்களது வாதத்திற்கு வலு சேர்க்க, பாகிஸ்தான் கருத்தை மேற்கோள் காட்டினர். இங்கிருந்து தான், அரசியலாக துவங்கியது.

சர்ஜிக்கல் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பியது தவறு. இது நடந்திருக்கக்கூடாது. நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களை நாம் பாராட்டாவிட்டால், யார் செய்வார்கள்? ராணுவத்தை புகழ்வதை, அரசியலாக பார்க்கக் கூடாது என்றார். சர்ஜிக்கல் தாக்குதலின் பலன்கள் கிடைத்துவிட்டனவா என்பதை வெளிப்படையாக விவாதிக்க முடியாது. ஒரே தாக்குதலில், பாகிஸ்தான் நடவடிக்கையை மாற்றி கொள்ளும் என எதிர்பார்ப்பது பெரிய தவறு. இதற்கு நீண்ட நாளாகும் என்றார். சர்ஜிக்கல் தாக்குதல் நடத்த ராணுவத்தை அரசு சுதந்திரமாக அனுமதித்தது. சிறப்பு பயிற்சிகள், இடம், ரகசியம் ஆகியவை ரகசியமாக அளிக்கப்பட்டது. இது பெரிய அனுபவமாக எனக்கும் கிடைத்தது.

ரூபாய் நோட்டு வாபஸ், திடீரென எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல. கறுப்பு பணம் வைத்துள்ளவர்கள், அதனை வங்கியில் செலுத்த வேண்டும். அபராதம் செலுத்த வேண்டும். அப்போது தான் தப்பிக்க முடியும் என எச்சரிக்கை விடுத்தோம். பெரும்பாலான மக்கள், மோடி மற்றவர்களை போல் தான் இருப்பார் என கருதினர். சிலர் மட்டுமே கறுப்பு பணத்தை செலுத்தினர். 2019 தேர்தல் மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலானதாக இருக்கும். மக்களின் அன்பு மற்றும் ஆசிர்வாதத்தின் வெளிப்பாடே மோடி. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Tags
Show More
Back to top button
Close
Close