தமிழ் நாடு

ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவதில் தூள் கிளப்பும் தமிழக கிராமங்கள்: நாட்டிலேயே இரண்டாமிடம்!

கிராமபுறங்களில் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவதில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. முதலிடம் ஹிமாச்சலப் பிரதேசம், மூன்றாமிடத்தில் மகாராஷ்டிரா, குஜராத் உள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை இணையமைச்சர் மனோஜ் சின்கா தெரிவித்துள்ளார்.

இந்தியா இன்டர்நெட் பயன் பாட்டில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அதேசமயம், இன்டர்நெட் பயன்பாடு கிராமப்புற பகுதிகளை முழுமையாகச் சென்றடையவில்லை. இன்டர்நெட் மற்றும் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவோர் நகரங்களில்தான் அதிகம் வசிக்கின்றனர். இந்த நிலையில், கிராமங்களில் ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் இமாச்சலபிரதேசம் முதலிடத்தில் உள்ளது தெரிய வந்துள்ளது. தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருக்கிறது. மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் கிராமங்களில் ஸ்மார்ட் போன் பயன்படுத்து வோர் எண்ணிக்கை 30 சதவீதமாக உள்ளது.

தொலை தொடர்பு நிறுவனங்கள் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியுள்ளன. மேலும், நவீன தொழில்நுட்பம், தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெட்வொர்க் விரிவடைந்துள்ளது. இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கையால் ஒருங்கிணைந்த நெட்வொர்க் உருவாகியுள்ளது. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் குறைந்த கட்டணத்தில் அதிக திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. மேலும், குறைந்த விலைக்கு ஸ்மார்ட் போன் களும் கிடைப்பதால் கிராமங்களில் ஸ்மார்ட் போன்கள் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதாக மக்களவையில் மத்திய தொலைத் தொடர்புத் துறை இணையமைச்சர் மனோஜ் சின்கா தெரிவித்துள்ளார்.

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் 43.36 சதவீத கிராம மக்கள் ஸ்மார்ட் போன் வைத்துள்ளனர். தமிழகத்தில் கிராமங்களில் 41.98 சதவீதத்தினர் ஸ்மார்ட் போன்கள் பயன் படுத்துகின்றனர்.

தமிழகத்தில் ஸ்மார்ட் போன்கள் பயன்பாடு குறித்து பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் சி.ஜி.எம்(தமிழ்நாடு) ராஜூ கூறுகையில், நிறுவனத்துக்கு தமிழகம் முழுவதும் அதிகளவில் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இதில் குறிப்பாக கிராமப்புறங்களில் அதிகளவில் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். தமிழகத்தில் அடிப்படை கட்டமைப்புகள் சிறப்பாக இருப்பதால் சிறந்த சேவையை வழங்கி வருகிறோம். இங்குள்ள அனைத்து கிராமங்களிலும் நிறுவனத்தின் விற்பனை மையங்கள் இருக்கின்றன. மேலும் பல பஞ்சாயத்துகளில் வைஃபை வசதியும் செய்து கொடுத்துள்ளோம். கிராமங்களில் ஸ்மார்ட் போன்கள் வைத்திருப்போரின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கிறது என்று தெரிவித்தார்.

பி.எஸ்.என்.எல் தவிர்த்து இதர தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் கிராமங்களில் அதிகளவில் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இதர மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் அதிகளவில் நகரங்கள் இருக்கின்றன. இங்குள்ள கிராமங்கள் முழுமை யாக கிராமத்தின் தாக்கத்தை கொண்டிருக்கவில்லை. பெரும்பாலான கிராமங்கள் புறநகர் பகுதிகளாகத்தான் இருக்கின்றன. எனவே, தமிழகத்தில் கிராமங்களில் ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகமாக இருக்கிறது என்று ஊரக மேம்பாட்டு துறை அதிகாரி தெரிவித்தார்.

Inputs – Tamil The Hindu

Tags
Show More
Back to top button
Close
Close