தமிழ் நாடு

தேனாம்பேட்டை வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் போக்குவரத்து வரும் ஜனவரியில் தொடக்கம்

சென்னை தேனாம்பேட்டை(ஏ.ஜி.டி.எம்.எஸ்) வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் போக்குவரத்து ஜனவரி மாத இறுதியில் தொடங்கும் என்று மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனை முன்னிட்டு, இத்தடத்தில் பாதுகாப்பு ஆணையரின் ஆய்வு மற்றும் சோதனை ஓட்டம் ஜனவரி 15-ஆம் தேதிக்கு முன்னதாக நடைபெறவுள்ளது. வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடந்து வந்தன. இதில், இரண்டாவது வழித்தடப் பணிகள் நிறைவடைந்து மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. முதல் வழித் தடத்தில், தேனாம்பேட்டை(ஏ.ஜி.டி.எம்.எஸ்) வண்ணாரப்பேட்டை இடையே 10 கி.மீ தூரத்தில் சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்தப் பாதையில் வரும் ஜனவரி மாத இறுதியில் மெட்ரோ ரயிலை இயக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் கூறியது: “சென்னையில் 20,000 கோடி மதிப்பில் 44 கி.மீ தொலைவு மெட்ரோ ரயில் போக்குவரத்துத் திட்டத்தில் 34 கி.மீ. தூர பணிகள் முடிவடைந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. மீதமுள்ள தேனாம்பேட்டை வண்ணாரப்பேட்டை இடையேயான 10 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதை மற்றும் ரயில் நிலையங்கள் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்தப் பாதையில் சிக்னல்கள் அமைக்கும் பணி நிறைவடைந்து விட்டது. காற்றோட்ட வசதி, குளிர்சாதன வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. சுரங்க ரயில் நிலையங்களில் சிக்னல் முறை, நடைமேடை திரை கதவுகள் ஆகியவற்றை பொறியாளர்கள் தற்போது பரிசோதித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு ஆணையரின் ஆய்வு வருகிற 2019 ஜனவரி 15-இல் நடைபெறும் என எதிர்பார்க்கிறோம். இதற்குத் தேவையான அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டு விட்டன.
வண்ணாரப்பேட்டை, மண்ணடி, உயர்நீதிமன்றம், சென்ட்ரல் மெட்ரோ, அரசினர் தோட்டம், எல்.ஐ.சி, ஆயிரம் விளக்கு, ஏஜிடிஎம்எஸ் ஆகிய 8 சுரங்கப்பாதை ரயில் நிலையங்களில் சோதனை ஓட்டம் நடத்தப்படவுள்ளது. இந்த ஆய்வு முடிந்த பிறகு, ஜனவரி இறுதியில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்தப் பாதையில் ரயில் போக்குவரத்து தொடங்கியதும் வண்ணாரப்பேட்டையில் இருந்து நேரடியாக விமான நிலையத்துக்கு பயணிக்க முடியும். கீழ் அடுக்கு, மேல் அடுக்கு என இரண்டு அடுக்குகளைக் கொண்ட சென்ட்ரல் மெட்ரோ ரயில்நிலையம், பயணிகளுக்கு பிரமிப்பை உருவாக்கும். முதல் அடுக்கில் எழும்பூரில் இருந்து வரும் ரயில்களும், இரண்டாவது அடுக்கில் ஏ.ஜி.டி.எம்.எஸ். ரயில் நிலையத்தில் இருந்து வரும் ரயில்களும் நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றனர்.

Tags
Show More
Back to top button
Close
Close