தமிழ் நாடு

வலுவான கூட்டணி அமைப்போம்: மு.க.ஸ்டாலின் ராகுல் கூடாரத்தைக் கலைப்போம்: சேலம் பா.ஜ.க இளைஞரணி கூட்டத்தில் Dr.தமிழிசை பேச்சு

தி.மு.க. கூட்டணியை விட பா.ஜ.க. கூட்டணி வலுவான கூட்டணியாக அமையும் என்றும், இதன்மூலம் மு.க.ஸ்டாலின், ராகுல் கூடாரத்தைக் கலைப்போம் என்றும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

சேலத்தில் பா.ஜ.க மாநில இளைஞரணி மண்டல் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் பா.ஜ.க. வலுப்பெற்று வருகிறது. 2019 தேர்தலுக்கு இளைஞர்களும், மகளிரும் தயாராகி வருகின்றனர். முத்தலாக் சட்டத்துக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்து வருவது வருத்தமளிக்கிறது. இதுதொடர்பாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.பி. அன்வர்ராஜா பேசியது, துரதிர்ஷ்டவசமானது. இஸ்லாமிய பெண்களுக்கு சம உரிமை வழங்கவே இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் போக்சோ சட்டத்தை வரவேற்கிறோம். பிரதமர் மோடியின் 48 வெளிநாட்டுப் பயணத்துக்கு ₹2,000 கோடி செலவிடப்பட்டது. இந்தப் பயணத்தால் 20 சதவீதம் அந்நிய முதலீடு அதிகரித்து, 38 ஆயிரம் பில்லியன் அமெரிக்க டாலர் கிடைத்துள்ளது.

மத்திய அரசு தமிழகத்துக்கு நிதி தரவில்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவரை தமிழகத்துக்கு ₹1 லட்சத்து 81ஆயிரம் கோடி நிதி வழங்கியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் ₹81 ஆயிரம் கோடிதான் நிதி வழங்கப்பட்டுள்ளது.

முத்ரா வங்கிக் கடன் திட்டம் மூலம் உத்தரப் பிரதேசத்தைக் காட்டிலும், தமிழகத்தில்தான் அதிகம் பேர் கடன் பெற்றுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் மட்டும், ₹1 கோடியே 89 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசின் பல்வேறு துறை சார்பில் நிதி வழங்கப்பட்டு வருகிறது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் ₹6,300 கோடி மதிப்பில் குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்படும். தி.மு.க. கூட்டணியை விட பா.ஜ.க கூட்டணிதான் வலுவான கூட்டணியாக அமையும். எந்தெந்த கட்சியுடன் கூட்டணி குறித்து பேசப் போகிறோம் என்பது பின்னர் தெரிவிக்கப்படும். மு.க.ஸ்டாலின், ராகுல் கூடாரத்தைக் கலைப்போம் என்றார்.

Inputs from: Dinamani

Tags
Show More
Back to top button
Close
Close