செய்திகள்

₹130 கட்டணத்தில் 100 சேனல்கள்: பார்க்கும் சேனல்களுக்கு மட்டும்தான் பணம்: 29ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருகிறது டிராயின் புதிய விதிமுறைகள்

வாடிக்கையாளர்கள் தேவையில்லாத சேனல்களைப் பார்க்கும் வகையில் நிறுவனங்கள் வற்புறுத்தக் கூடாது என்றும், தங்களுக்கு விருப்பப்பட்ட சேனல்களை மட்டும் தேர்வு செய்து அதற்கு மட்டும் பணம் செலுத்தலாம் என்றும், 100 சேனல்களுக்கு அதிகபட்சமாக ₹130 வரை கட்டணமாக வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கலாம் என்றும் மத்திய தொலைதொடர்பு கட்டுப்பாடு மற்றும் சீரமைப்பு ஆணையமான டிராய் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வரும் 29ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிராய் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ”டிசம்பர் 29-ம் தேதிக்குப் பின் டிராயின் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தால், ஏற்கெனவே மக்கள் பார்த்துக்கொண்டிருக்கும் பல்வேறு சேனல்கள் சேவை நிறுத்தப்படும் என்ற செய்தி ஊடகங்களில் வெளிவருகிறது. தற்போது வாடிக்கையாளர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் சேனல்களில் எதையுமே 29-ம் தேதிக்குப் பின்பு துண்டிக்கக் கூடாது என்று அனைத்து ஒளிபரப்பு சேவைதாரர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் நலன் கருதி மாதாந்திர கட்டண விவரத்தை எளிதாக டிராய் மாற்றி அமைத்துள்ளது. இந்த மாதாந்திர வாடகைத் திட்டம் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான சேவையை மட்டும் தேர்வு செய்து பயன்படுத்திக்கொள்ள அருமையான வாய்ப்பாகும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதமான கூடுதல் கட்டணமும் வராது.

வாடிக்கையாளர்கள் தங்களின் குடும்பத்தின் தேவைக்கு ஏற்றார்போல், கவனமாக தங்களுக்குப் பிடித்தமான சேனல்களைத் தேர்வு செய்து அதற்குரிய மாதாந்திர வாடகையை மட்டும் செலுத்தலாம். அல்லது சேவைதாரர்கள் வழங்கும் பேக்கேஜ் முறையையும் தேர்வு செய்யலாம்.

மேலும் 100 சேனல்களுக்கு அதிகபட்சமாக ₹130 வரை கட்டணமாக வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கலாம். இதில் ப்ரீ ஏர் சேனல், கட்டணம் செலுத்தி பார்க்கும் சேனல் அல்லது இரண்டும் சேர்த்ததாகக் கூட இருக்கலாம். ஒருவேளைகட்டணம் செலுத்திப் பார்க்கும் சேனலாக இருந்தால், கூடுதல் தொகையை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டியது இருக்கும்.

இந்தப் புதிய விதிமுறையின்படி வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையில்லாத சேனல்களைப் பார்க்கும் வகையில் வற்புறுத்தத் தேவையில்லை. தங்களுக்கு விருப்பப்பட்ட சேனல்களை மட்டும் தேர்வு செய்து அதற்கு மட்டும் பணம் செலுத்தலாம்”. இவ்வாறு டிராய் தெரிவித்துள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close