மூன்று ஜாதியினர் தான் பிரதமர் மோடியின் மெய் காப்பாளர்களாக ஆக முடியும் என்று பச்சை பொய் உரைக்கிறது ஒன் இந்தியா தமிழ் இணையதள செய்தி.

இந்த செய்தியின் உண்மை தன்மையை தற்போது பார்ப்போம். ஒன் இந்தியா தமிழ் குறிப்பிட்டுள்ள செய்தியில், “கவுரவ் யாதவ் என்ற ஹரியானாவை சேர்ந்த நபர் கடந்த 2014 செப்டம்பர் மாதம், பிரதமர் மோடிக்கு பாதுகாவலராக விண்ணப்பம் செய்து இருந்தார். எல்லா விதமான தேர்வுகளிலும் வெற்றிபெற்ற இவர் நேர்முக தேர்விலும் வெற்றிபெற்றார். ஆனால் கடைசியில் இவர் தேர்வு செய்யப்படவில்லை. இவருக்கு மத்திய அரசு அளித்த விளக்கத்தில், மூன்று ஜாதியினர் மட்டுமே பிரதமருக்கு பாதுகாவலர் ஆக முடியும். ஜாட், ராஜ்புட் , ஜாட் சீக்கியர்கள் ஆகிய மேல் ஜாதியினர் மட்டுமே மோடிக்கு பாதுகாவலர் ஆக முடியும். மற்ற ஜாதியினர் இதில் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்று விளக்கம் அளித்துள்ளது”, என்று கூறப்பட்டுள்ளது. இது பச்சை பொய்.

Advertisement

கவுரவ் யாதவ் என்பவர் பாதுகாவலராக விண்ணப்பம் செய்தது உண்மை. அவருக்கு ஜாதி ரீதியில் முன்னுரிமை அளிக்கப்படாததும் உண்மை. அதனால் அவர் நீதிமன்றம் சென்றதும் உண்மை. ஆனால், அது பிரதமருக்கான பாதுகாவலர் ஆவதற்கு இல்லை. மாறாக ஜனாதிபதிக்கு பாதுகாவலர் ஆவதற்கு.

இரண்டாவதாக இந்த பதவிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் ஜட் மற்றும் ராஜ்புட் சமூகத்தினர் மேல் ஜாதியினர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது இரண்டாவது பொய். ஜட் மற்றும் ராஜ்புட் சமூகத்தினர் க்ஷத்ரிய வம்சத்தை சேர்ந்தவர்கள். அதாவது போர் வீரர்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள், ஹிந்து, இஸ்லாம், சீக்கியர்கள் என்று அனைத்து மதத்திலும் இருக்கிறார்கள்.

கவுரவ் யாதவ் என்பவர், கிருஷ்ண பகவான் பிறந்த குலமான யாதவ குலத்தை சேர்ந்தவர். யாதவர்கள் பாரத நாட்டின் சில பகுதிகளை ஆண்டு வந்ததால் இவர்களும் க்ஷத்ரிய குலம் தான்.

ஜனாதிபதி பாதுகாவலர் தேர்வில் ஜாட் மற்றும் ராஜ்புட் சமூகத்தினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் பழக்கம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் முதல் இருந்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்திலும் இதே நடைமுறை தான். மன்மோகன் சிங் ஆட்சி செய்த காலத்திலும், மேதகு அப்துல் கலாம், மேதகு பிரணாப் முகர்ஜீ ஆகியோர் ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் இதே நடைமுறை தான் பின்பற்றப்பட்டு வந்துள்ளது.

ஆனால் ஒன் இந்தியா தமிழ் பதிவிட்டுள்ள செய்தியில், பிரதமர் மோடியின் பாதுகாவலராக உயர் ஜாதியினர் தான் இருக்க வேண்டும் என்பது போல சித்தரித்துள்ளது. செய்தி முழுவதும் உண்மைக்கு புறம்பான தகவல்களும், செய்திக்கு சம்மந்தமே இல்லாமல் செய்தி முழுவதும் பிரதமர் மோடியின் பெயரும் புகைப்படமும் பதிவிடப்பட்டுள்ளது.

போலி செய்திகளை கூறி, பாரத பிரதமர் மோடி மீது அவதூறு பரப்பும் முயற்சியே அன்றி, இது வேறெதுவும் இல்லை.

Share