தமிழ் நாடு

புத்தாண்டு தினத்தில் இரவு 1 மணி வரைதான் மது விற்பனை, கொண்டாட்டம் : வாலிபர்களுக்கும், ஹோட்டல்களுக்கும் காவல்துறை கடிவாளம்

புத்தாண்டு கொண்டாட்டத்தையும், மது விற்பனையையும் இரவு ஒரு மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்றும், அளவுக்கதிகமான மது அருந்தியவர்களை நட்சத்திர விடுதிகள் பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

2019ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் பிறக்க உள்ளது. புத்தாண்டை எப்படியெல்லாம் கொண்டாடலாம் என்று இளைஞர்கள் இப்போதே திட்டமிட்டு வருகிறார்கள். அதே சமயம், இந்த புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது எந்த அசம்பாவிதங்களும் நடைபெறாமல், பாதுகாப்பான புத்தாண்டாக மாற்ற என்னவெல்லாம் செய்யலாம் என்பதை காவல்துறை ஆலோசித்து வருகிறது. அதன் அடிப்படையில் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி உரிமையாளர்களுடன் இன்று காவல்துறையினர் ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு நட்சத்திர விடுதிகளுக்குக் காவல்துறையினர் விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டன. அதில், புத்தாண்டு கொண்டாட்டத்தை நள்ளிரவு ஒரு மணியுடன் முடித்துக் கொள்ள வேண்டும். நீச்சல் குளத்தின் மீதோ அல்லது அதன் அருகிலோ மேடைகள் அமைக்கக் கூடாது. நீச்சல் குளங்களை பாதுகாப்பான வகையில் மூடி வைக்க வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும். 1 மணிக்கு மேல் மது விற்பனை செய்யக் கூடாது. பார்களும் செயல்படக் கூடாது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பாதுகாப்புப் பணிக்கு பெண் காவலர்களையும் அமர்த்திக் கொள்ள வேண்டும். அதிகமான மது குடித்திருப்பவர்களை பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும். விடுதி நிர்வாகத்திடம் போதிய வாகனங்கள் இல்லையென்றால் காவல்துறையை அழைத்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Picture Courtesy : The Hindu

Tags
Show More
Back to top button
Close
Close