சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டாவில் ஜனவரி 6-ம் தேதி நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பரில் தீர்ப்பளித்தது. ஆனால், சபரிமலையில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, ஐயப்ப பக்தர்களும் இந்து அமைப்பினரும் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஐயப்ப பக்தர்களிடம் காவல்துறையினர் கெடுபிடி செய்து வருவதாகக் கூறி பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருவனந்தபுரத்தில் உள்ள அரசு தலைமைச் செயலகத்துக்கு எதிராக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பாஜவினர் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஜனவரி 6-ம் தேதி கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டாவில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். பா.ஜ.க மூத்த தலைவர்களும் இந்த கூட்டத்தில் கலந்துக் கொள்கின்றனர். இதுமட்டுமின்றி ஜனவரி 27-ம் தேதி திருச்சூரில் நடைபெறும் கேரள மாநில பா.ஜ.க இளைஞரணி மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். பிரதமர் மோடியின் அடுத்தடுத்த கேரள பயணம் அங்கு ஆட்சியை பிடிக்கும் ஆவலுடன் இருக்கும் கேரள மாநில பா.ஜ.க-வினருக்கு புதிய தெம்பை கொடுத்துள்ளது.

( தகவல் மூலம்: தமிழ் இந்து )

Share