செய்திகள்

சந்தேகப்படும் கணினியின் பதிவுகளை கண்காணிக்க அனுமதி: மத்திய விசாரணை அமைப்புகளுக்கு உள்துறை அமைச்சகம் சிறப்பு அதிகாரம்

சி.பி.ஐ, அமலாக்கத்துறை, என்.ஐ.ஏ உள்ளிட்ட 10 மத்திய விசாரணை அமைப்புகள் எந்த கணினியின் பதிவுகளையும் கண்காணிக்கவும், அவற்றை பறிமுதல் செய்யவும் அதிகாரம் வழங்கும் புதிய அறிவிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் இறையாண்மை, நம்பகத்தன்மை, பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் அயல்நாடுகளுடனான நட்புறவை பாதுகாப்பது, இவற்றை மீறும் வகையில் குற்றங்கள் இழைக்கப்படுவதை தடுப்பது அல்லது அது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு தேவை என மத்திய அரசு நிறைவாகக் கருதும்போது தகவல்களை இடைமறிக்கும் அதிகாரத்தை விசாரணை அமைப்புகளுக்கு வழங்கலாம் என தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69(1)-ஆவது பிரிவு கூறுகிறது. இந்த பிரிவின் கீழ் தகவல்கள் மற்றும் அவற்றின் மூலம் மேற்கொள்ளப்படும் தகவல் போக்குவரத்தை இடைமறித்தல், படித்தல், பறிமுதல் செய்தல் உள்ளிட்ட அதிகாரங்கள் 10 மத்திய விசாரணை அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. சி.பி.ஐ, அமலாக்கத்துறை, என்.ஐ.ஏ, உளவு அமைப்பான ரா, ஐபி எனப்படும் உளவுத்துறை, மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு, மத்திய நேரடி வரிகள் வாரியம், போதைப்பொருள் தடுப்பு பிரிவு, டெல்லி காவல் ஆணையர், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கான சமிக்ஞை உளவுப் பிரிவு இயக்ககம் ஆகிய 10 விசாரணை அமைப்புகளுக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி எந்த கணினியையும் கண்காணிக்கவும், இடைமறிக்கவும் விசாரணை அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கும் இந்த உத்தரவில், உள்துறை செயலர் ராஜீவ் கவுபா கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம், தகவல் போக்குவரத்து நடைபெறாத நிலையிலும், கணினியில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகளை கண்காணிக்கும் அதிகாரம் முதன்முறையாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பரிமாறிக்கொள்ளப்படும் தகவல்களை மட்டுமே இடைமறிக்கும் அதிகாரம் மட்டுமே இருந்தது. கணினிகளில் உருவாக்கப்படும், புதுப்பிக்கப்படும், சேமிக்கப்படும் தரவுகள் அனைத்தையும் இடைமறிப்பதோடு, பறிமுதல் செய்யும் அதிகாரமும் தற்போது  வழங்கப்பட்டுள்ளது என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

News Source – Polimer News

Tags
Show More
Back to top button
Close
Close