செய்திகள்

புதுச்சேரியில் கிரண் பேடி செய்த 3 எம்.எல்.ஏக்கள் நியமனம் செல்லும்: உச்ச நீதிமன்ற உத்தரவால் புதுவை பா.ஜ.க மகிழ்ச்சி

புதுச்சேரியில் 3 எம்.எல்.ஏ-க்களை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி நியமித்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த மார்ச் 22-ஆம் தேதி அளித்தது. அதில், “யூனியன் பிரதேசங்களைப் பொருத்தவரையிலும், துணைநிலை ஆளுநருக்கு நியமன எம்.எல்.ஏ-க்களை தன்னிச்சையாக நியமிக்க அதிகாரம் உள்ளது. நியமன எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்ய சட்டப்பேரவைத் தலைவருக்கு அதிகாரம் இல்லை. எனவே, இந்த நியமனத்துக்கு எதிராக குடியரசுத் தலைவரிடம்தான் முறையிட வேண்டும். அவர்களை பேரவைக்குள் அனுமதிக்க மறுத்து சட்டப்பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன” என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-வும், முதல்வரின் பார்லிமென்ட்டரி செயலருமான லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 24-ஆம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், புதுச்சேரியில் பா.ஜ.க-வை சேர்ந்த 3 எம்.எல்.ஏ-க்களை நியமனம் செல்லும் என்றும் நியமன எம்.எல்.ஏ விவகாரத்தில் தலையிட புதுச்சேரி அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு புதுவை பா.ஜ.க-வினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close