செய்திகள்

ஆதார் தகவலை திரும்ப பெறலாம் : வருகிறது புதிய சட்டம்

இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் ஆதார் எனப்படும் தனிப்பட்ட 12 இலக்க எண் வழங்கப்பட்டுள்ளது. இந்திய தனிப்பட்ட அடையாள ஆணைய அமைப்பு சார்பில் வழங்கப்படும் ஆதார் அட்டை பல்வேறு சேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. “எனது ஆதார், எனது அடையாளம்” என்ற முத்திரையுடன் வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டை மூலம் மத்திய, மாநில அரசுகள் தங்கள் நலத்திட்டங்களையும், உதவிகளையும் சிறப்பாக செய்ய முடிகிறது. ஆதார் சேவையை மேலும் வலுப்படுத்த ஆதார் எண்ணை பான்கார்டு, குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு, சமையல் எரிவாயு வினியோகம் உள்பட பல்வேறு சேவைகளுடன் இணைக்க உத்தரவிடப்பட்டது.

சமீபத்தில் நடந்த ஒரு வழக்கில் வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க தேவை இல்லை என்று கூறப்பட்டது. அதுபோல சிம் கார்டுகள் வாங்க ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்றும் கோர்ட்டு அறிவித்தது. ஆதாரை மற்ற சேவைகளுக்கு கட்டாயம் என்று கூறுவது சட்ட விரோதம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து ஆதார் ஆணையம் சில பரிந்துரைகளை கொண்டு வந்தது. அந்த பரிந்துரைகள் சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது.

சட்ட அமைச்சகம் அதை பரிசீலித்து, “அனைத்துத் தரப்பு மக்களும் ஆதார் எண்ணை முக்கிய சேவைகளில் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்” என்று திருத்தம் செய்தது. தற்போது இந்த பரிந்துரை மத்திய அமைச்சரவையிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையும் இதற்கு ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக புதிய சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close