காங்கிரஸ்காரர்களும், தி.மு.க-வினரும் ஈழத்தமிழர்களை ஈவிரக்கமில்லாமல் கொன்று விட்டார்கள் என்று இது நாள் வரை கூறி வந்த வைகோ இன்று தனது தொலைகாட்சி பேட்டியில் காங்கிரஸ் பற்றியும், நேரு குறித்தும் புகழ்ந்து தள்ளியது மட்டுமன்றி, பா.ஜ.க குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் தரக் குறைவாக பேசி உள்ளார். வைகோவின் இந்த திடீர் போக்கில் உள்ள மர்மங்களை இந்த கட்டுரை அவிழ்க்கிறது.

தமிழகத்தில் கத்தி கத்தியே தன்னை கெடுத்துக் கொண்டதுடன், தன் கட்சியையும் ஒன்றுமில்லாமல் ஆக்கி, தன்னை நம்பி வந்தவர்களின் வாழ்க்கையையும் ஒன்றுமில்லாமல் ஆக்கி, தனி மரமாக நின்றுக் கொண்டு, தன்னை விரட்டி அடித்த கட்சியிடமே திரும்பவும் தன்னை கொண்டு போய் விற்றுக் கொண்ட ஒரு அரசியல் தரகர் யாரென்று கேட்டால் பிறந்த குழந்தை கூட சொல்லிவிடும், அவர்தான் வைகோ என்ற அண்ட புளுகர் என்று. தனக்கு தெரிந்த அரைகுறை விவரங்களை எல்லாம் பொய்யான உவமானங்கள் கூறி மக்களை திசை திருப்ப இவர் எடுத்துக் கொண்ட அரசியல் ரீதியான முயற்சிகள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராய் போனாலும் கூட தன்னையும், தன் குடும்பத்தாரையும் காப்பாற்றிக் கொள்வதில் மட்டும் இவர் பலே கில்லாடி.

Advertisement

ஊர் முழுக்க சுத்தம் சுகாதாரம் குறித்து பேசிக் கொண்டு, ஒரு மிகப்பெரிய சிகரட் கம்பெனியின் விநியோகஸ்தராக தனது மகனை நியமித்துக் கொண்டு, தமிழக இளைஞர்களுக்கு சிகரட்டை விற்றுக் கொண்டு கோடி, கோடியாக சம்பாதித்துக் கொண்டிருக்கும் இந்த பலே கில்லாடி தான் இன்றைக்கு தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் “நேருதான் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்… காங்கிரஸ்தான் நாட்டுக்கு போராடியது… பா.ஜ.க காரனுக்கும் சுதந்திரத்துக்கும் தொடர்பில்ல… வீர சாவர்க்கர் யார் என்று எவனுக்கும் தெரியாது .. அவருடைய படத்தை நாடாளுமன்றத்தில் பார்க்கின்ற போதெல்லாம் எனக்கு வயிறு எரிகிறது.. இந்த மோடிக்கு என்ன தெரியும்”… என்று உளறியது மட்டுமல்லாமல் வீர சாவர்க்கரையும்,  பிரதமர் மோடி அவர்களையும் மரியாதை இல்லாமல் ஒருமையில் தரக்குறைவான முறையில் ஒரு ரவுடி பேசுவது போல பேசியுள்ளார்.

வீர சாவர்க்கர் யார்? பா.ஜ.க முன்னோடிகளுக்கும் இந்திய சுதந்திர போராட்டத்துக்கும் என்ன தொடர்பு? அவர்களெல்லாம் இந்த நாட்டுக்கு என்ன தியாகம் செய்தார்கள்? என்பது குறித்த மிகப் பெரிய வரலாறு இருக்கிறது. சான்றுகள் இருக்கிறது. கூகுள் தளத்திலே சென்று க்ளிக் செய்தால் கூட வீர சாவராக்கர் சுதந்திரத்துக்காக செய்த தியாகங்கள், அவர் அந்தமான் சிறையில் பெற்ற 11 ஆண்டுகள் சிறை தண்டனையை சொல்லும். இவர் புகழும் காங்கிரஸின் பிரதமராக இருந்த இந்திரா காந்தியே சாவர்க்கரை புகழ்ந்து தள்ளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வாஜ்பாய் ஆட்சியில் வீர சாவர்க்கர் புகைப்படத்தை பாராளமன்றத்தில் திறந்த போது பா.ஜ.க-வுடன் தான் கூட்டணியின் தான் இருந்தார் வைகோ. இந்த திறப்பிற்கு பின்பு பல மாதங்கள் வாஜ்பாய் ஆட்சியிலும், 2014-ஆம் ஆண்டு பா.ஜ.க-வுடன் கூட்டணி சேர்ந்த போது சாவர்க்கர் படம் பாராளமன்றத்தில் பா.ஜ.க-வால் திறக்கப்பட்டது என்பது மறந்து விட்டதா இந்த அரசியல் கோமாளிக்கு? ஆங்கில ஆட்சியில் நேரு சிறையில் இருந்த போது அவருக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது என்பதும், ஆனால் சாவர்க்கர் 11 ஆண்டுகள் அந்தமான் தீவில் ஒவ்வொரு நாளும் கொடுமைப்படுத்தப்பட்டு தனிமைபடுத்தப்பட்டார் என்பதும் அனைவரும் அறிந்ததே. வைகோவை போன்ற அரசியல் தரகர்கள் கொள்கைவாதியான வீர சாவர்க்கர் பெயரை உச்சரிக்கக் கூட தகுதி இல்லாத இழிபிறவிகள் என்பதை இங்கு ஆணித்தரமாக் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். 

இந்த நிலையில் அறிஞர் அண்ணாவை பற்றி எனக்கொன்றும் தெரியாது .. நான் கண்ட அண்ணா கலைஞர்தான் எனக் கூறி கருணாநிதிக்கே ஆப்பு வைத்த வைகோவுக்கு வீர சாவர்க்கரைப் பற்றி தெரியாமல் போனதில் ஆச்சரியம் இல்லை.  

ஊர் சட்டம், உலக சட்டம் எல்லாம் தெரிந்து வைத்திருக்கும் இந்த கில்லாடி, தான் ஒரு நாட்டின் பாராளமன்ற உறுப்பினர் என்றும் கூடப் பார்க்காமல் 1989-ஆம் ஆண்டு கள்ளத் தோணியில் யாழ்பாணம் காடுகளுக்கு சென்று, பிரபாகரனை சந்தித்தார். இவர் சென்று  வந்தது பணத்துக்காத்தான் என்ற உண்மையை அன்றைய ஊடகங்கள் பிட்டு, பிட்டு வைத்தன. தி.மு.க-வில் ஸ்டாலினை வளர விடக் கூடாது, நான்தான் வளர்வேன் எனக் கூறி தி.மு.க-வை கைப்பற்றி, முதல்வர் ஆக இவர் போட்ட கனவுத் திட்டத்தை தெரிந்து கொண்ட கருணாநிதி இவரை கட்சியிலிருந்தே விரட்டி அடித்தார். அப்போது இவருக்காக உயிரை நீத்துக் கொண்ட பல இளைஞர்களின் தியாகத்தை மறந்து, இன்று கொஞ்சம் கூட அருவருப்பின்றி தான் எதிர்த்த ஸ்டாலினிடமே சரணாகதி அடைந்துவிட்ட இவரைப் பார்த்து இன்று பிறந்த குழந்தைகள் கூட வாய்விட்டு சிரிக்கிறது.

அவ்வப்போது இவர் மாறி, மாறி பேசுவதை பார்ப்பவர்கள் இவருடைய நாக்கு மனித நாக்கா அல்லது பிளாஸ்டிக்கால் செய்த செயற்கை நாக்கா என வியக்கின்றனர். இந்த நாக்குதான் 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது மோடி அவர்களை அர்ஜுனன் என்றும், நான் அவருக்கு இரதம் ஓட்டும் சாரதி என்றும் பேசியது. அந்த  தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லை என்று தெரிந்ததும் அ.தி.மு.க-வுடன் ஒட்டிக் கொள்ள முயற்சி செய்தது. கடைசியில் தி.மு.க ஓட்டுக்களை பிரிக்க அப்பாவி விஜயகாந்தை தன் பக்கம் ஈர்த்து, அவருடன்  உறவாடி அவரை எந்த பக்கமும் போகவிடாமல் செய்து, அவரையும் தனி ஆளாக்கியதும் இந்த நாக்குதான். அதற்காக தோட்டத்திலிருந்து பண மூட்டையை இவர் வாங்கிக் கொண்டு விட்டதாக பரவலாகவும் பேசப்பட்டது. பல ஊடகங்களிலும் செய்திகள் கசிந்தன. தற்போது தன்னை விரட்டி அடித்த இடத்துக்கே மீண்டும் வந்து வருங்கால முதல்வராக மு.க.ஸ்டாலின் ஆவதை யாராலும் தடுக்க முடியாது என்று பேசுவதும் அதே நாக்குதான். காங்கிரசுடன் கரம் கோர்த்து ஈழத் தமிழர்களை கொன்று குவித்த தி.மு.க-வை  அரசியலிலிருந்து  துரத்தும் வரை ஓயப்போவதில்லை என சில மாதங்கள் முன்புவரை கூறிவந்ததும் இந்த நாக்குதான். அதே நாக்குதான் இன்றைக்கு காங்கிரசையும், நேரு வம்சத்தையும் புகழ்கிறது. இதற்கெல்லாம் ஒரு காரணம் இல்லாமல் இல்லை. இப்போது அவருக்கு வேண்டியதெல்லாம் அவர் மட்டுமே உறுப்பினராக உள்ள தனது லெட்டர் பேடு கட்சிக்கு தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்து கொண்டு ஒரே ஒரு தொகுதி பெறுவது மட்டும்தான்.

தங்கள் நாட்டு விடுதலை போருக்காக உலகெங்கும் சென்று கஷ்டப்பட்டு நிதி திரட்டிய புலிகளின் பணம் வெளிநாடுகளில் உள்ளதாகவும், பிரபாகரன் மறைவுக்குப் பிறகு அந்த பணம் குறித்த விசாரணையை, கைதான புலிகளின் தலைவர்களிடம் இலங்கை அரசு மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த பணம் சில தலைவர்களிடையே பங்கு பிரிக்கப்பட்டு விட்டதாகவும், அந்த பங்கு பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வர முடியாமல் இவர் அவஸ்தை படுவதாகவும், மோடி அரசின் கருப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கைகளால் இவர் கடும் விரக்தி அடைந்து அதனால்தான் இவர் மன நலம் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளவரைப் போல பேசுவதாகவும் கூட கூறப்படுகிறது. அதனால் தான் அரசியல் நாகரீகங்களைத் தாண்டி ஒருநாட்டின் பிரதமரைக் கூட இவர் ஒருமையில் பேசுகிறாரோ என எண்ணத் தோன்றுகிறது.

பாவம் புலிகள்… அவர்கள் யாரும் இங்கு இல்லை என்ற தைரியத்தில்தான் காங்கிரசை புகழும் தைரியம் இவருக்கு வந்து விட்டது. உண்மையில் இவர் சுயநலம் இல்லாமல் தமிழக மீனவர்கள் மற்றும் ஈழத்தமிழர்கள் நலனில் அக்கறை செலுத்துபவராக இருந்தால் மோடியை தரக் குறைவாக பேச வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் பிரதமர் மோடியால் இலங்கையிலுள்ள ஈழப்பகுதிகள் தற்போது படிப்படியான வளர்ச்சியை அடைந்து வருகிறது. தான் இந்திய பிரதமரானதும் உடனே இலங்கை சென்ற அவர் முதல் நிகழ்ச்சியாக யாழ்பாணம் மற்றும் திரிகோணமலை பகுதிகளில் நடைபெற்ற நிகழ்சிகளில் தான் பங்கேற்றார். முதன் முதலாக யாழ்பாணம் சென்ற இந்திய பிரதமரும் அவர்தான். தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் இந்தியாவின் திட்டம் காங்கிரஸ் அரசால் தொடங்கி வைக்கப்பட்டாலும், அந்த திட்டத்தை விரிவு படுத்தி பயனுள்ள திட்டமாக்கினார். தமிழர்கள் விரும்பும் மாகாண ஆட்சி அமைக்கப்பட்டது. அதுமட்டுமல்ல தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்க்ஷே கட்சி அங்கு நடைபெற்ற அதிபர் தேர்தலில் கணிசமான வெற்றி பெற்றிருந்தும், அவருடைய கட்சி உடைந்து, தமிழ் பிரதிநிதிகள் ஆதரவுடன் சிரிசேனா ஆட்சி அமைந்ததற்கான இராஜதந்திரங்கள் பின்னணியில் உள்ளது குறித்தும் வைகோவுக்கு தெரியும். இந்திய தொழில் நிறுவனங்களை அங்கு களம் இறக்கி இருப்பதன் மூலம் நடைபெறும் வளர்சிப் பணிகளையும் அவர் அறிவார். அது மட்டுமல்லாமல் பல ஆண்டுகளாக மரண தண்டனை, ஆயுள் தண்டனை பெற்று இலங்கை சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களை தூக்கு மேடையிலிருந்து மோடி காப்பாற்றினார் என்பதும் அவருக்கு தெரியும். தற்போது மீனவர்கள் பிரச்சினை எண்பது சதவீத அளவுக்கு குறைந்து விட்டது என்பதும் மொத்தத்தில் காங்கிரசைவிட பா.ஜ.க ஆயிரம் மடங்கு பரவாயில்லை என்பதும் அவருக்கு தெரியும். ஆனாலும் இன்று அவரது வாய் மாறி பேசுகின்றதென்றால் மேற் சொன்ன அவருடைய சின்னஞ் சிறிய ஆசைகள்தான் என்பதை மறுப்பதற்கில்லை. இவருக்காக மேற்கண்ட விளக்கங்களை தரவில்லை. அவர் தொலைக் காட்சியில் அளித்த தரம் குறைந்த பேட்டியை தவறி யாராவது கேட்டிருக்கக் கூடும். அவர்களுக்கு அளிக்கும் பதிலாக இந்த விளக்கங்கள் தரப்படுகிறது. 

SG Suryah is an Advocate practising in the High Court of Madras & Company Secretary by profession. Currently he is the Vice President of BJYM (BJP Youth Wing) of Tamil Nadu.

Share