செய்திகள்

திருவண்ணாமலை கிறிஸ்துவ காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை : காப்பகத்துக்கு சீல்

திருவண்ணாமலை திண்டிவனம் சாலை உள்ள நாச்சிப்பட்டு கிராமத்தில் தனியார் கிறிஸ்துவ குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வந்தது. திருவண்ணாமலை திருவள்ளூவர் நகரை சேர்ந்த லூபன்குமார் (வயது 65), அவரது மனைவி மெர்சிராணி (55), அதே பகுதியை சேர்ந்த மணவாளன் (60) ஆகியோர் இந்த காப்பகத்தின் நிர்வாகிகள்.

இந்த காப்பகத்தில் 6 வயது முதல் 19 வயது உட்பட்ட குடும்பம் இல்லாத அனாதை சிறுமிகள் 47 பேர் தங்கி இருந்தனர். இந்த காப்பகத்தில் கடந்த 17-ந் தேதி கலெக்டர் கந்தசாமி ஆய்வு மேற்கொண்டதாக மாலைமலர் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. அப்போது அங்கு தங்கியுள்ள குழந்தைகளுக்கு தேவையான சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் இடவசதி இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து கலெக்டர் அங்குள்ள சிறுமிகளை திருவண்ணாமலை பெரும்பாக்கத்தில் உள்ள வரவேற்பு இல்லத்திற்கு மாற்ற உத்தரவிட்டார் என்றும், பின்னர் அங்கிருந்து சிறுமிகள் வரவேற்பு இல்லத்திற்கு மாற்றப்பட்டனர் என்றும் அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. வரவேற்பு இல்லத்திற்கு அழைத்து வரப்பட்ட குழந்தைகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது அங்குள்ள சில சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்துதல், உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்துதல் ஆகியவை செய்யப்பட்டு உள்ளது தெரியவந்தது. மேலும் காப்பகத்தில் உள்ள சிறுமிகளை வீட்டு வேலைக்கு பயன்படுத்தி தகாத வார்த்தைகளால் பேசி துன்புறுத்தியதும் தெரியவந்தது.

இதுகுறித்து திருவண்ணாமலை சட்டம் மற்றும் நன்னடத்தை அலுவலர் சித்ரபிரியா (30) திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். திருவண்ணாமலை துணை காவல் சூப்பிரண்டு அண்ணாதுரை, அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் அந்த குழந்தைகள் காப்பகத்திற்கு போலீசார் ‘சீல்’ வைத்தனர்.

இதனையடுத்து போக்சோ சட்டம் உள்பட பல்வேறு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, காப்பகத்தின் நிர்வாகிகள் லூபன்குமார், அவரது மனைவி மெர்சிராணி, மணவாளன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

 

Inputs & Picture Courtesy : Maalimalar

Tags
Show More
Back to top button
Close
Close