Amazon Great Indian Sale - 2019

நரேந்திர மோடி பிரதமரான பின்னர் இந்திய ரூபாயின் மதிப்பு மோடியின் தாயார் வயதுக்கு நெருங்கிக்கொண்டிருக்கிறது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ராஜ் பாப்பர் ஒரு சர்ச்சை கருத்தை வெளியிட்டார். ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் சி.பி.ஜோஷி, பிரதமர் மோடி, உமா பாரதி ஆகியோர் தாழ்ந்த ஜாதியை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு இந்து மதம் பற்றி தெரியாது என்று கருத்து தெரிவித்தார். இதனை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டித்ததும், ஜோஷி தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார்.

இப்போது மற்றொரு காங்கிரஸ் தலைவர் காங்கிரஸை சங்கடப்படுத்தும் வகையில் பிரதமர் மோடியின் பரம்பரை பற்றி ஒரு சர்ச்சை கருத்தை கூறியுள்ளார். மராட்டிய மாநிலத்தை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி விலாஸ் முட்டேம்வார் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில், “மோடியை பிரதமர் ஆவதற்கு முன்பு யாருக்கு தெரியும்? ஏன், இப்போதும் அவரது தந்தை யார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் ராகுல் காந்தியின் தந்தையை அனைவருக்கும் தெரியும்” என்றார். அவரது இந்த பேச்சு தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து முட்டேம்வாரிடம் கேட்டபோது, “அது ஒரு உட்கட்சி கூட்டம். நான் பேசியதை வீடியோ எடுத்தவர் அதனை திருத்தி வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளார். ராகுல் காந்தியின் முந்தைய தலைமுறை பற்றி உலகுக்கே தெரியும். ஆனால் பலருக்கு மோடியின் தந்தை பற்றி தெரியாது என்று தான் பேசினேன். இது உண்மை தான்” என்றார்.

Advertisement Amazon Great Indian Sale - 2019

இதற்கு பதில் கூறும் விதமாக, இறந்து போன தனது தந்தையின் பெயரைக் காங்கிரஸ் தலைவர்கள் அரசியலுக்கு இழுப்பது ஏன் எனப் பிரதமர் நரேந்திர மோடி வினவியுள்ளார். மத்தியப் பிரதேசம் விதிசாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முப்பதாண்டுகளுக்கு முன் இறந்த தனது தந்தையைக் காங்கிரஸ் கட்சியினர் ஏன் அரசியலுக்கு இழுக்கிறார்கள் என வினவினார். தனது குடும்பத்தினர் யாரும் அரசியலில் ஈடுபடவில்லை என்றும் மோடி குறிப்பிட்டார். காங்கிரஸ் தலைவர்களின் இத்தகைய பேச்சுக்களை ராகுல் காந்தி ஊக்குவிப்பதாகவும் மோடி குற்றஞ்சாட்டினார்.

மேலும் ராஜஸ்தானில் நடைபெற்ற பா.ஜ.க தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், வேறு பிரச்சினைகள் இல்லாததால், காங்கிரஸ் கட்சி என் மீது சேற்றை வாரி வீசுகிறது. தரம் தாழ்ந்த அரசியலை நடத்துகிறது. ஆரோக்கியமான விவாதத்தில் ஈடுபடுவதற்கு பதிலாக, சேற்றை வாரி இறைக்கிறது.ஒரு காங்கிரஸ் தலைவர், என் தாயாரை திட்டுகிறார். மற்றொரு தலைவர், என் தந்தையை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறார். இன்னொருவர் எனது சாதியை பற்றி கேள்வி எழுப்புகிறார்.அவர்கள் யார் என்பது முக்கியம் அல்ல. அவர்களை இப்படி பேசச்சொல்லி தூண்டி விட்டது யார் என்பதுதான் முக்கியம். பரம்பரை வழி வந்த தலைவர் கொடுத்த கட்டளைப்படியே அவர்கள் இப்படி பேசுகிறார்கள். 4 தலைமுறைகளாக இந்த நாட்டை ஆண்டவர்கள் மூலமாக நான் அறிந்து கொள்ள விரும்புவது என்னவென்றால், இந்திய அரசின் தலைவர் வெளிநாட்டுக்கு செல்லும்போது அவரது சாதியை பற்றி உலகம் தெரிந்து கொள்ள வேண்டுமா? இந்த மனோபாவம், அவர்களின் தலித் விரோத, சாதிய முகத்தை வெளிப்படுத்துகிறது. அந்த கட்சிக்கு தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் மீது எப்போதும் வெறுப்புதான் உள்ளது. நீதித்துறை மீதும், ஜனநாயகம் மீதும் காங்கிரசுக்கு நம்பிக்கை இல்லை. நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த விரும்பாமல், அதை முடக்க பார்த்தது. இப்போது, காங்கிரஸ் கட்சி புதிய ஆபத்தான விளையாட்டை தொடங்கி இருக்கிறது.

அதாவது, காங்கிரசின் அரசியல் நோக்கத்துக்கு ஏற்ப சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் வழக்குகளின் கால அட்டவணையை தயாரிக்காவிட்டால், அவர்களுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வருவதாக அச்சுறுத்த தொடங்கி உள்ளனர். அயோத்தி வழக்கை தாமதப்படுத்தும் நோக்கத்தில், மாநிலங்களவையில், உள்ள காங்கிரசின் வக்கீல் எம்.பி.க்கள் இப்படி செய்தனர். எண்ணிக்கை பலத்தை வைத்து இந்த காரியத்தில் ஈடுபடுகிறார்கள். ஆனால், ஜனநாயகத்தை காப்பாற்ற இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே அரசு, கடந்த 5 ஆண்டுகள் செய்த சாதனைகளை எட்டிப்பிடிக்க காங்கிரசுக்கு 75 ஆண்டுகள் தேவைப்படும்” என்று பிரதமர் மோடி பேசினார்.

Share