செய்திகள்

சீக்கியர்களுக்காக உருவாக்கப்படும் சாலை : அடிக்கல் நாட்டினார் துணை குடியரசுத் தலைவர்..!

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் இருந்து பாகிஸ்தானின் கர்த்தார்ப்பூர் வரையான சாலை வழித்தடத்துக்குக் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு அடிக்கல் நாட்டினார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் கர்த்தார்ப்பூரில் உள்ள குருத்துவாராவுக்குச் சீக்கிய பக்தர்கள் சென்று வருவதற்காகச் சாலையும் இருநாடுகளுக்கு இடையிலான எல்லையில் காவல்சாவடியும் அமைக்க வேண்டும் எனப் பாகிஸ்தான் பிரதமரிடம் பஞ்சாப் மாநில அமைச்சர் நவஜோத் சிங் சித்து கோரிக்கை விடுத்தார். இதற்குப் பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொண்டது.

இந்நிலையில் இந்திய பஞ்சாபின் குருதாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக், பாகிஸ்தான் பஞ்சாபில் உள்ள கர்த்தார்ப்பூர் இடையே சாலை வழித்தடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்தியாவில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் பஞ்சாப் ஆளுநர் வி.பி.பத்நூர், முதலமைச்சர் அமரீந்தர் சிங், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ஹர்தீப் சிங் பூரி, ஹர்சிம்ரத் கவுர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய முதலமைச்சர் அமரீந்தர் சிங், போர் நிறுத்தத்தை மீறி எதிர்நாட்டு வீரர்களைக் கொல்லும் பாகிஸ்தானின் செயல் கோழைத்தனம் எனத் தெரிவித்தார். எல்லை தாண்டித் தாக்குதல் நடத்தி அமைதியைச் சீர்குலைப்பதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். இதனிடையே பாகிஸ்தானின் கர்த்தார்ப்பூரில் புதனன்று நடைபெறும் நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் இந்த சாலைக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close