செய்திகள்

பிரிவினைவாதத்தை தூண்டிவிடும் காங்கிரஸ் மேற்கொண்ட அநாகரிகமான செயல்..!

ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தல் டிசம்பர் 7-ம் தேதி நடைபெற உள்ளது. அம்மாநிலத்தில் உள்ள நாத்டிராவா தொகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவர் சி.பி.ஜோஷி வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் நேற்று முன்தினம் ஒரு பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். “பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க எம்.பி. உமா பாரதி, இந்து இயக்கவாதி சாத்வி ரிதம்பரா ஆகியோர் தாழ்ந்த சாதிகளை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு இந்து மதம் பற்றி ஒன்றும் தெரியாது. கற்றறிந்த பிராமணர்களுக்கு மட்டுமே இந்து மதம் பற்றி தெரியும்” என்றார். அவரது இந்த பேச்சு சர்ச்சையை உருவாக்கியது. அவரது பேச்சு தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக அமையும் என்றும் கருதப்பட்டது. அன்று இரவு அவர் சமூக வலைத்தளத்தில், “எனது பேச்சை பா.ஜ.க திருத்தி வெளியிட்டமைக்காக கண்டனம் தெரிவிக்கிறேன். இந்த யூகங்களுக்கு முடிவுகட்டும் வகையில் எனது பேச்சை வெளியிடுகிறேன்” என்று கூறி அவர் தனது பேச்சையும் வெளியிட்டார்

ஆனாலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சி.பி.ஜோஷியின் கருத்தை ஏற்க மறுத்தார். ராகுல் காந்தி டுவிட்டர் வலைத்தளத்தில், “ஜோஷியின் கருத்து கட்சியின் கருத்து அல்ல. காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கு மாறானது. கட்சித் தலைவர்கள் சமூகத்தின் எந்த பிரிவினரையும் காயப்படுத்தும் வகையிலான இது போன்ற தகவல்களை வெளியிடக் கூடாது. காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து ஜோஷி தனது தவறை உணருவார் என நம்புகிறேன். அவர் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து சி.பி.ஜோஷி தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கும், கட்சி தொண்டர்களின் உணர்வுகளுக்கும் மரியாதை அளித்து, எனது கருத்து சமூகத்தின் எந்த பிரிவினரையாவது காயப்படுத்தி இருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார். ஆனாலும் அவரது மன்னிப்பை பா.ஜ.க ஏற்க மறுத்தது. கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சுதான்சு திரிவேதி கூறும்போது, “ஜோஷியின் கருத்து அடிப்படை ஆதாரமற்றது, தவறானது, கண்டிக் கத்தக்கது. இந்திய கலாசாரம் மற்றும் இந்து மதத்தை அவர் இழிவு படுத்திவிட்டார். காங்கிரசுக்கு இந்திய கலாச்சாரம், இந்து மதம் பற்றி ஒன்றும் தெரியாது என்பதையே இது காட்டுகிறது. ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக காங்கிரஸ் ஒவ்வொரு மதத்தையும் பிரிக்க நினைக்கிறது. இதற்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close