செய்திகள்

சுனாமி தாக்குதலுக்கு பின் மிக பெரிய பேரழிவு கஜா புயலால் தான் !

கஜா புயலின் தாக்கம் குறித்து பேரிடர் மீட்பு குழு துணை கமாண்டன்ட் ராஜன் பாலு அளித்த பேட்டி வருமாறு:

சென்னை மற்றும் வட மாவட்டங்களை தாக்கிய வர்தா புயல் போன்றுதான் கஜா புயலும். காற்றின் வேகம் வர்தா புயல் போன்றுதான் இருந்தது. வர்தா புயலால் சேதம் குறைவு. ஆனால் கஜா புயலால் நாகை, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கஜா புயலானது 2004-ம் ஆண்டு சுனாமி தாக்கியது போன்ற மோசமான பேரழிவாகும். சுனாமியால் கடலோர மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். அதுபோல் இப்போதும் கடலோர மாவட்டங்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளது.

இதில் அரசு எந்திரம் சிறப்பாக செயல்பட்டது. மக்களுக்கு முன்கூட்டியே விழிப்புணர்வு ஏற்படுத்தியது. புயல் கரையை கடக்கும் இடங்களை தெரிவித்து அங்கிருந்த நூற்றுக்கணக்கான மக்களை வெளியேற்றி முகாம்களில் தங்க வைத்து விட்டனர். இல்லையெனில் கடுமையான உயிர்சேதம் ஏற்பட்டு இருக்கும். மற்றபடி 46 பேர் சுவர் இடிந்தும், மரங்கள் முறிந்து விழுந்தும் பலியாகி இருக்கிறார்கள்.

தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில அரசுகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நாங்கள் 10 பேரிடர் மீட்பு குழுவை அனுப்பி வைத்தோம். இதில் 8 குழு தமிழக மாவட்டங்களிலும் 2 குழு புதுவையிலும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு உள்ளது. நேற்று வரை எங்கள் குழுவினர் முறிந்து விழுந்த 1,629 மரங்களை அப்புறப்படுத்தினர். 123 மின்சார கம்பங்களை நட்டு 189 கி.மீ. தூரத்துக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடலூர், நாகப்பட்டினம் போன்றவை புயல் தாக்கும் அபாயம் உள்ள பகுதிகள். எனவே இங்கு மின்சார கேபிள்களை பூமிக்கு அடியில் பதிப்பது தான் சிறந்த வழி. இது சேதங்களையும், மனித உயிரிழப்புகளையும் தவிர்க்கும். மேலும் சேதம் அடைந்து மோசமான நிலையில் உள்ள மின்சார கம்பங்கள், வயர்கள் போன்றவற்றையும் காய்ந்து போன மரங்களையும் முன் கூட்டி கண்டுபிடித்து அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்

Input & Credits : Dhinamurasu

Tags
Show More
Back to top button
Close
Close