செய்திகள்

இன்னும் 50 நாட்களில் நாட்டிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு – மத்திய அரசு

இன்னும் 50 நாட்களில் நாட்டிலுள்ள அனைத்து வீடுகளும் மின்சார இணைப்புப் பெற்ற வீடுகளாக மாறிவிடும் என மத்திய எரிசக்தி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. ஆர். கே. சிங் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் அனைவருக்கும் 24 மணிநேரமும் தடையற்ற மின்சார விநியோகம் செய்வதே மத்திய அரசின் இலக்கு என்று அவர் கூறியுள்ளார். 

2018 ஏப்ரல் 28 அன்று இந்தியா, 100% மின் இணைப்புப் பெற்ற கிராமங்களைக் கொண்ட நாடாக மாறியுள்ளது.  நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆனபிறகும் கூட, மின்சார வசதி பெறாத 18,500 கிராமங்களுக்கும், அவற்றில் வசித்த பரம ஏழைகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.  இவற்றில் பெரும்பாலான கிராமங்கள், மலைப்பகுதிகள், வனப்பகுதிகள்,  இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் என்பதோடு, மின் இணைப்புக்கான கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தத் தேவையான கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்ல முடியாதவையாகவும், கட்டுமானத் தொழிலாளர்கள் கிடைக்காத இடமாகவும் இருந்தன.

அருணாச்சலப்பிரதேசம் (272), ஜம்மு-கஷ்மீர் (54), மேகாலயா (9) மற்றும் மணிப்பூர் (12) மாநிலங்களில் உள்ள 350 தொலைதூர மற்றும் வனப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு, தலைச்சுமையாக 10 நாட்கள் நடந்துதான் கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்ல முடிந்தது. ஜம்மு-கஷ்மீர் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் சில கிராமங்களுக்கு ஹெலிகாப்டர்களில் கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. மிகவும் சிக்கலான, எளிதில் சென்றடைய முடியாத 2762 கிராமங்களில் சூரிய சக்தி மூலம் மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பீகார், ஜார்கண்ட், சத்திஷ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிஷா மாநிலங்களில் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட 7614 கிராமங்களில் மின்சார வசதியை ஏற்படுத்துவதில் பெரும் சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது.  இப்பகுதிகளில் மின் இணைப்பு வழங்கப்பட்டதன் மூலம் அவற்றின் சமூக – பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகை ஏற்பட்டுள்ளது.  மத்திய அரசு, மாநில அரசுகள், மின்சார விநியோக அமைப்புகள் போன்றவை ஒருங்கிணைந்து செயல்பட்டு, இந்தப் பொது இலக்கை எட்டியுள்ளன.

2017 செப்டம்பரில் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட சௌபாக்கியா திட்டம், நாட்டிலுள்ள அனைத்து வீடுகளிலும் மின்சார இணைப்பு வழங்குவதற்கான மாபெரும் திட்டமாகும். இந்தத் திட்டத்தை 2019 மார்ச் மாதத்திற்குள் நிறைவேற்றி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  தற்போது சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வீடுகள் வீதம் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.  வேறு எந்த நாடும் இதுபோன்ற சாதனையை படைத்ததில்லை. தங்கள் வீடுகளில் விளக்கு எரியும் போது மக்களின் முகத்திலும் மகிழ்ச்சியைக் காணமுடிகிறது.

சௌபாக்கியா திட்டத்தின்கீழ், 2018 நவம்பர் 19 வரை சுமார் 2 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது.  மின்சார இணைப்பு வழங்குவதோடு மட்டுமின்றி, அதற்கு தேவையான மின்சார விநியோகக் கட்டமைப்புகள், மின் மாற்றிகள், மீட்டர்கள் போன்றவற்றோடு தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் தானியங்கி முறையிலான பணிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. 

இதற்காக கிராமப்புறங்களில் தீன்தயாள் உபாத்யாயா கிராமப்புற மின்வசதி திட்டத்தையும், நகர்ப்புறங்களில் ஒருங்கிணைந்த மின்சார  மேம்பாட்டு திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.  இத்திட்டத்தின்கீழ், ரூ.1,40,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம், 1204 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதுடன், ஏற்கனவே உள்ள 16601 துணை மின் நிலையங்களின் திறனும் அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதுதவிர, 1,61,101 புதிய மின்மாற்றிகள் (ட்ரான்ஸ்பார்மர்கள்) அமைக்கப்பட்டிருப்பதுடன், 1,11,734 கிலோமீட்டர் தொலைவிற்கு உயர் அழுத்த மின் கம்பிகளும், 98,028 கி.மீ. தொலைவிற்கு குறைந்த அழுத்த மின்கம்பிகள் பொருத்தும் பணியும் நிறைவடைந்துள்ளது.  

 இதுதவிர, 24 மணிநேரமும் தரமான, நம்பகமான மின்சார விநியோகத்தை உறுதி செய்ய உதய் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் மின்வாரியங்களுக்கு தொழில்நுட்ப மற்றும் வர்த்தக ரீதியாக ஏற்பட்டு வந்த இழப்புகளும், மின்சார விநியோகத்திற்கும், வருவாய்க்கும் இடையிலான வித்தியாசமும் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.  மாநிலங்களின் வட்டி செலவில் ரூ.31,800 கோடி சேமிக்கப்பட்டிருப்பதுடன், மாநிலங்களுக்கு ஏற்பட்டு வந்த இழப்பும் ரூ.51,575 கோடியிலிருந்து ரூ.15,132 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.  நிலக்கரியின் விலை மற்றும் அதனை கொண்டு செல்வதற்கான கட்டணம் பெருமளவு உயர்ந்த போதிலும், என்.டி.பி.சி. போன்ற பெரிய நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தாதற்காக அவற்றை பாராட்ட வேண்டும்.  உலக வங்கி வெளியிட்ட எளிதில் மின் இணைப்பு கிடைக்கும் நாடுகளின் பட்டியலில் 2014 ஆம் ஆண்டு 111-வது இடத்தில் இருந்த இந்தியா, 2018-ல் 24 – ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

 இன்னும் 50 லட்சம் வீடுகளுக்கு மட்டுமே மின் இணைப்பு வழங்க வேண்டியுள்ளது.  தற்போதைய நிலையில், இன்னும் 50 நாட்களில் 100% வீடுகள் மின் இணைப்புப் பெற்றவையாக மாறவுள்ளன.  இந்தியாவின் இந்த சாதனை இந்த ஆண்டின் மாபெரும் வெற்றிச் சரித்திரம் என சர்வதேச எரிசக்தி முகமை புகழாரம் சூட்டியுள்ளது.

 மின்சாரத்தை பயன்படுத்துவோர் பட்டியலில் ஒருநாளைக்கு ஒரு லட்சம் நுகர்வோர் புதிதாக இணைந்து வரும் வேளையில், மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவையும் எழுந்துள்ளது.  இதனை ஈடுசெய்யும் விதமாக கடந்த 4 ஆண்டுகளில் நாட்டில் கூடுதலாக ஒரு லட்சம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.  இதன்மூலம் மின்சார பற்றாக்குறை 4.2% – லிருந்து, 0.7% – ஆகக் குறைந்துள்ளது.  உள்நாட்டு மின்தேவையை பூர்த்தி செய்வதோடு, இந்தியா தற்போது நேபாளம், பங்களாதேஷ், மியான்மர் போன்ற அண்டை நாடுகளுக்கும் மின்சாரத்தை ஏற்றுமதி செய்து வருகிறது.

தூய்மையான மற்றும் பசுமையான எரிசக்தி வழங்குவதற்கான இலக்கை அடையும் விதமாக, 2022-க்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி 175 கிகாவாட் அளவிற்கு உற்பத்தி செய்யப்பட உள்ளது.  இதில் சூரிய சக்தி மூலம் 100 கிகாவாட்டும், காற்றாலைகள் மூலம் 60 கிகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படும்.  ஒட்டுமொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி 34,000 மெகாவாட்டிலிருந்து கடந்த நான்கரை ஆண்டுகளில் 72,000 மெகாவாட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சூரியசக்தி மின் உற்பத்தி மட்டும் கடந்த 4 ஆண்டுகளில் எட்டு மடங்கு அதிகரித்துள்ளது.  இதன்மூலம் சர்வதேச அளவில் இந்தியா அளித்த உறுதிமொழி விரைவில் எட்டப்படும்.

எரிசக்தி சிக்கனத்தை ஊக்குவிக்க உஜாலா போன்ற பல்வேறு புதுமையான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் திரு ஆர். கே. சிங் தெரிவித்துள்ளார்.  

Source : PIB

Tags
Show More
Back to top button
Close
Close