டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக புகார் அளித்த தலைமைச் செயலாளர் அன்ஷூ பிரகாஷ் மாற்றப்பட்டுள்ளார். தொலைத் தொடர்புத் துறைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ஆலோசனை நடத்த கெஜ்ரிவால் இல்லத்திற்கு சென்ற போது, முதலமைச்சர் முன்னிலையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்களால் தாம் தாக்கப்பட்டதாக அன்ஷீ பிரகாஷ் புகார் தெரிவித்தார்.

இது தொடர்பாக இரண்டு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். முதலமைச்சர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதனிடையே உரிமை மீறல் வழக்குத் தொடுத்த அன்ஷூ பிரகாஷின் மனு மீதான விசாரணை வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இவ்வழக்கில் பதில் தாக்கல் செய்ய டெல்லி அரசுக்கும் ஆளுநருக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இது குறித்து சில மாதங்களுக்கு முன்னர் ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் சங்கத் தலைவர் மணீஷா சக்சேனா கூறுகையில், அன்சு பிரகாஷ்  மட்டும் தனியாக கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் 10, 12 எம்.எல்.ஏ-க்கள் அங்கே இருந்துள்ளனர். டெல்லியில் குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ரேஷன் அட்டை முறையாக வழங்கப்படாதது ஏன் என்று சில எம்.எல்.ஏ-க்கள் கேள்வி  எழுப்பி சிலர் அவரைத் தாக்கியுள்ளனர் என கூறியிருந்தார்.

தலைமைச் செயலர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுவது ஜோடிக்கப்பட்ட பொய் என்று ஆம் ஆத்மி கட்சி மறுப்பு தெரிவித்திருந்தது. முன்னதாக டெல்லி முழுவதும் சிசிடிவி கேமரா அமைக்கும் அரசின் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடுவதாக அன்ஷு பிரகாஷை தலைமை செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என டெல்லி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share