செய்திகள்

இந்தியா உள்பட 23 நாடுகளில் வங்கிக் கணக்கு இல்லாத சுமார் 200 கோடி மக்களுக்கு, இணையம் மூலம் வங்கி சேவை : தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

நிதி தொழில்நுட்பம் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு இந்தியாவே முன்னோடி என்றும், இத்தகைய நிறுவனங்களைத் தொடங்க, இந்தியாவே மிகச்சிறந்த இடம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கிழக்காசிய உச்சிமாநாட்டில் பங்கேற்க, பிரதமர் மோடி டெல்லியில் இருந்து சிங்கப்பூர் சென்றடைந்த போது  அவருக்கு சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முதல் நிகழ்ச்சியாக ஃபின்டெக் எனப்படும் நிதித் தொழில்நுட்ப நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, இந்தியா உள்பட 23 நாடுகளில் வங்கிக் கணக்கு இல்லாத சுமார் 200 கோடி மக்களுக்கு, இணையம் மூலம் வங்கி சேவை வழங்கும் அபிக்ஸ் என்ற திட்டத்தை தொடங்கிவைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, தொழில்நுட்பம் மூலம் வரலாற்றில் இந்தியா மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

தொழில்நுட்பம் மனிதர்களின் வாழ்வில் வரம்பற்ற வாய்ப்புகளை வழங்குவதாகவும், குக்கிராமங்களில் வசிப்போரின் வாழ்வையும் மேம்படுத்துவதே தமது அரசின் நோக்கம் என்றும் தெரிவித்தார். உலகிலேயே நிதி தொழில்நுட்பம் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க இந்தியாவே மிகச் சிறந்த இடம் என்றும் மோடி குறிப்பிட்டார்.

பின்னர், பிரதமர் மோடி – அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இரு நாட்டு உறவுகள், பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகிய அம்சங்களுடன், இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது, இருநாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகளும் உடனிருந்தனர்.

தென்கிழக்காசிய நாடுகளுடன்  இந்தியாவின் உறவு வலுவடைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டின் போது சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, தாய்லாந்து நாடுகளுடன் வணிகம், பொருளாதாரம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் உறவை வலுப்படுத்துவது குறித்து அந்நாட்டுத் தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை  நடத்தினார்.

Tags
Show More
Back to top button
Close
Close