நேற்று பிற்பகல் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்கள். அப்போது செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ரஜினிகாந்த் அவர்கள் அளித்த பதில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. “பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பலர் ஒன்று சேர்கின்றனர். அந்தளவு அது ஆபத்தான கட்சியா?’’, என்று நிருபர் கேட்டுள்ளார். அதற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், “அது ஆபத்து என அவர்கள் நினைக்கிறார்கள். அப்படியென்றால் அது ஆபத்துதானே!”, என்று கூறினார்.

சூப்பர்ஸ்டார் அவர்கள் ஏதேனும் கூற மாட்டாரா என்று பசியில் ஏங்கிக்கொண்டிருக்கும் ஊடகங்களுக்கு, சூப்பர்ஸ்டார் இவ்வாறு கூறியது ஒரு நல்ல வாய்ப்பாக கிடைத்துவிட்டது போல் தெரிகிறது.

“பா.ஜ.க ஆபத்தான கட்சி என்ற தொனியில் நடிகர் ரஜினிகாந்த் பேசியிருப்பது…” என்ற தலைப்பில் ட்விட்டர் போலிங் நடத்தப்பட்டுள்ளது.

சில ஊடகவியலாளர்கள், சூப்பர்ஸ்டார் இவ்வாறு பேசியதை பெரிது படுத்தவே, ட்விட்டர்வாசிகளோ, ரஜினிகாந்த் குழம்பி போயுள்ளார் என்பன போன்ற கருத்துக்களை பரப்ப துவங்கினர்.

தமிழக ஊடகங்களின் நிலை இப்படி இருக்க, தேசிய ஊடகங்களோ, இதற்கு நேர்மாறான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ரஜினிகாந்த் அவர்கள் பா.ஜ.க-விற்கு எதிரான கூட்டணியை (மஹாகட்பந்தன்) கடுமையாக தாக்கியுள்ளார் என்று கூறியுள்ளது.

தற்போது குழம்பியுள்ளது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களா அல்லது ஊடகங்களா என்ற கேள்வி தான் சாதாரணமாக எழுகிறது.
இந்த குழப்பங்களுக்கு நடுவே பதிவிட்டுள்ள பா.ஜ.க இளைஞரணி துணைத் தலைவர் திரு எஸ்.ஜி சூர்யா அவர்கள், “தலைவர் பேசியதை வைத்துக்கொண்டு தமிழக ஊடகங்கள் ஒரு புரிதலையும், ஆங்கில ஊடகங்கள் அதற்கு நேர்மாறான புரிதலையும் எடுத்துக்கொண்டுள்ளது. இரண்டுமே சரியான புரிதல் அல்ல”, என்று பதிவிட்டார்.

அரசியல் விமர்சகர் திரு. சுமந்த்ராமன் அவர்கள் பதிவிடுகையில், “நான் புரிந்து கொண்ட வரை, பா.ஜ.க ஆபத்தான கட்சி என்று நினைத்து கொண்டால் அது ஆபத்தான கட்சி, இல்லையென்றால் அது இல்லை, என்று அவர் கூறியுள்ளார். தற்போது நீங்கள் முயற்சி செய்து, எப்படி வேண்டுமோ அப்படி புரிந்து கொள்ளுங்கள்”, என்று பதிவிட்டுள்ளார்.

இந்த புரிதல் தான் பெரும்பாலான ரஜினி ரசிகர்களுக்கும் உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், ரஜினி ரசிகர்களும் ஆதரவாளர்களும், ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிடுவதாக ஊடகங்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஊடகவியலாளர் மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் பதிவிடுகையில், “பா.ஜ.க-வின் B டீம் என்று கட்டுக்கதை பரப்பி வந்தது நொறுக்கப்பட்டதை ஜீரணிக்க முடியாமல் பொய்யான தகவலைப் பரப்பி வருகிறார்கள் அயோக்கிய ஊடகங்கள்”, என்று கடுமையாக சாடியுள்ளார்.

Share