செய்திகள்

2 முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள், உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து முனையம் அகியவையை நாட்டுக்கு இன்று அர்பணிக்கிறார் பிரதமர் மோடி

வாரணாசியில் 34 கிலோமீட்டர் தொலைவுக்கு ₹1571.95 கோடியில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளை, பிரதமர் திரு. நரேந்திர மோடி 2018 நவம்பர் 12 திங்கட்கிழமையன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கவுள்ளார்.  பிரதமருடன் உத்தரப்பிரதேச ஆளுநர் திரு. ராம் நாயக், மத்திய சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலை, கப்பல், நீர்வள ஆதாரம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்புத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி மற்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.  இந்த விழா உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் திராஹா, ஹர்துவா சுற்றுச்சாலையில் நாளை மாலை நடைபெறவுள்ளது.

வாரணாசி சுற்றுச்சாலையின் 16.55 கி.மீ. தூரத்திற்கான முதற்கட்ட பணிகள் ₹759.36 கோடியில் முடிக்கப்பட்டுள்ளது.  தேசிய நெடுஞ்சாலை எண்.56-ல், பபத்பூர்-வாரணாசி இடையிலான 17.25 கி.மீ. தொலைவுக்கான நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் ₹812.59 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பபத்பூர் விமான நிலைய நெடுஞ்சாலை,   வாரணாசியை விமான நிலையத்துடன் இணைப்பதுடன், ஜான்பூர், சுல்தான்பூர் மற்றும் லக்னோவுடனும் இணைக்கும். ஹர்ஹூவாவில் ஒரு மேம்பாலம் மற்றும் தார்னாவில் ஒரு ரயில்வே மேம்பாலத்துடன் கூடிய இந்த சாலை, வாரணாசியிலிருந்து விமான நிலையம் செல்வதற்கான பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும்.  வாரணாசி வாழ் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கும், இந்த நகரத்திற்கு வரும் இதர பயணிகளுக்கும் இது ஒரு பேருதவியாக இருக்கும்.

இரண்டு ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் ஒரு மேம்பாலத்துடன் கூடிய சுற்றுச்சாலை, தேசிய நெடுஞ்சாலை எண்.56 (லக்னோ-வாரணாசி), தேசிய நெடுஞ்சாலை எண்.233 (ஆசம்கர்-வாரணாசி), தேசிய நெடுஞ்சாலை எண்.29 (கோரக்பூர்-வாரணாசி) ஆகியவற்றில் போக்குவரத்தை எளிதாக்குவதுடன், அயோத்தி – வாரணாசி நெடுஞ்சாலையில் வாரணாசி நகருக்குள் வராமல் செல்வதற்கும் வாரணாசி நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் உதவும்.  அத்துடன் பயண நேரம், எரிபொருள் பயன்பாடு மற்றும் அப்பகுதியில் ஏற்படும் மாசு அளவையும் குறைக்கும். முக்கிய புத்தமத சுற்றுலாத் தலமான சாரநாத் செல்வதற்கான மிக வசதியான சாலையாகவும் இந்த சுற்றுச்சாலை இருக்கும்.

இந்தத் திட்டங்கள் கூடுதல் வேலைவாய்ப்பை வழங்குவதுடன், சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் வளர்ச்சிக்கும், அப்பகுதியின் பொருளாதார மேம்பாட்டிற்கும் ஊக்கமளிப்பதாக அமையும்.

வாரணாசியை உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள பிற இடங்களுடன் இணைப்பதற்கான தேசிய நெடுஞ்சாலைப் பணிகள், மொத்தம் 2,833 கி.மீ. தொலைவுக்கு ₹63,885 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வாரணாசியில் கங்கையாற்றில் அமைக்கப்பட்டுள்ள உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து முனையத்தையும் பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கவுள்ளார்.  இந்த முனையம், உலகவங்கி நிதியுதவியுடன், இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையத்தால், தேசிய நீர்வழிச்சாலை-1-ல் (கங்கையாறு) அமைக்கப்படும் 4 பன்முகப் போக்குவரத்து முனையங்களில் ஒன்றாக அமையும். மற்ற 3 முனையங்கள், சாஹிப்கஞ்ச், ஹால்டியா மற்றும் காஸிபூரில் அமைக்கப்பட்டு வருகின்றன.  1500-2000 டன் எடையுள்ள சரக்குகளை சுமந்து செல்லும் வர்த்தக ரீதியான சரக்கு கப்பல் மற்றும் படகு போக்குவரத்தை கங்கையாற்றில் மேற்கொள்வதற்கு இந்தத் திட்டம் வழிவகை செய்கிறது.

உள்நாட்டு நீர்வழிக் கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்படும் நாட்டின் முதலாவது (சுதந்திரத்திற்குப் பிறகு) சரக்குப் பெட்டகத்தையும் பிரதமர் பெற்றுக் கொள்கிறார்.  இந்த சரக்கு கப்பல், பெப்சிகோ நிறுவனத்தின் உணவு மற்றும் குளிர் பானங்களுடன், கடந்த அக்டோபர் இறுதி வாரத்தில் கொல்கத்தாவிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டது.

Source : PIB

Tags
Show More
Back to top button
Close
Close