செய்திகள்

பாலாறு தடுப்பணை பிரச்சனை குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பும் ஸ்டாலின், சந்திரபாபு நாயுடுவை சந்திக்கும் போது இது குறித்து ஏதேனும் பேசினாரா ? : முதல்வர் சரமாரி கேள்வி

இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள், தி.மு.க தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னைக்கு வருகை தந்த ஆந்திர முதல்வர் திரு.சந்திரபாபு நாயுடு, ஆழ்வார்பேட்டையில் மு.க ஸ்டாலின் இல்லத்தில் அவருடன் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தினார். டி.ஆர் பாலு, கனிமொழி, துரை முருகன், ஆ.ராசா உள்ளிட்டோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ள முதல்வர், “பாலாறு தடுப்பணை பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பும் ஸ்டாலின், சந்திரபாபு நாயுடுவை சந்திக்கும் போது இது குறித்து ஏதேனும் பேசினாரா”, என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பேசிய முதல்வர், “18 தொகுதிகளிலும் மட்டுமல்ல 234 தொகுதிகளிலும் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்திருந்த போது, பா.ஜ.க மதவாதக் கட்சி என தி.மு.க-வுக்கு தெரியவில்லையா?

தலைமை செயலக வழக்கில் தி.மு.க தடை ஆணை கேட்பது ஏன்? மடியில் கனம் இல்லை என்றால் தைரியமாக வழக்கை எதிர்கொள்ள வேண்டியது தானே? தமிழக அரசுக்கு தேவையான திட்டங்களை பெறுவதற்காக மத்திய அரசோடு இணக்கமாக உள்ளோம்”, என்று கூறினார்.

சர்க்கார் பட சர்ச்சைகள் குறித்து பேசிய முதல்வர், “தொண்டர்களோடு சேர்ந்து பொதுமக்களும் போராடியதால் தான் சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கினார்கள். தலைவர்களின் திட்டங்களை கொச்சைப்படுத்தினால், தொண்டர்கள் கொதித்து எழத்தான் செய்வார்கள். சினிமா டிக்கெட் கட்டணம் கூடுதலாக வசூலித்தால் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

₹300 கோடி, ₹500 கோடி முதலீடு செய்து திரைப்படம் எடுப்பவர்களுக்கு பணம் எங்கிருந்து வந்தது? சில நடிகர்கள் தங்களை வளமாக்கி கொள்ள திட்டமிட்டு தவறான கருத்துக்களை பரப்புகின்றனர். ஒரு படத்திற்கு ₹50 கோடி வாங்கும் நடிகர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள்?”, என்று சரமாரியான கேள்விகளை முன் வைத்தார்.

Tags
Show More
Back to top button
Close
Close