வாரணாசியில் கங்கை நதியின் மீது புதிதாக கட்டப்பட்டுள்ள பல்வகை முனையத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி திங்கள் (12.11.2018) அன்று நாட்டுக்கு அர்ப்பணிப்பார். நதியின் மீது கட்டப்படுகின்ற மூன்று பல் வகை முனையங்கள் மற்றும் இரண்டு ஒருங்கிணைந்த முனையங்களில் இது முதலாவதாகும். வாரணாசிக்கும், ஹால்டிக்கும் இடையே கங்கை நதியின் மீது 1500 முதல் 2000 டன் வரையிலான எடை கொண்ட பெரிய கப்பல்களை இயக்குவதற்கான மத்திய அரசின் நீர்வழிப் போக்குவரத்து திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பல்வகை முனையம் கட்டப்பட்டுள்ளது.

கொல்கத்தாவிலிருந்து வாரணாசிக்கு சென்ற மாதம் 30-ந் தேதி புறப்பட்ட பெப்சிகோ (இந்தியா) நிறுவனத்தின் சரக்குகளை ஏற்றிக் கொண்டு வரும் முதலாவது பெட்டக கப்பலையும் பிரதமர் வரவேற்க உள்ளார். எம்.வி.ரவீந்திரநாத் தாகூர் என்ற அந்த கப்பல் 16 டிரக் வண்டிகளில் ஏற்றி வரப்படும் உணவு மற்றும் தின்பண்டங்களுக்கு இணையான 16 பெட்டகங்களோடு வரும் 11-ந் தேதி வாரணாசிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரும்பிச் செல்லும் போது இந்தக் கப்பல் இஃப்கோ உரங்களை ஏற்றிச் செல்லும்.

இதே நாளில் (12.11.2018) வாரணாசியில் ₹425.41 கோடி செலவு பிடிக்கும் மூன்று கழிவு நீர் வெளியேற்றும் திட்டங்களையும் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிப்பார். மற்றொரு திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டுவார்.

ராம்நகரில் ₹72.91 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள கழிவுநீர் நிர்வாக திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.

Source : PIB

Share