உயர்ந்த பனிமலைகளில் பணியாற்றும் இராணுவ வீரர்களின் கடமையுணர்ச்சி நாட்டை வலிமையாக்குவதுடன், 125 கோடி மக்களின் கனவுகளுக்கும் எதிர்காலத்துக்கும் பாதுகாவலாக உள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற 2014ஆம் ஆண்டு காஷ்மீரின் சியாச்சினிலும், 2015இல் பஞ்சாப்பில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலும் இராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார். 2016இல் இமாச்சலப் பிரதேசத்திலும், 2017இல் காஷ்மீரில் குரிஸ் என்னுமிடத்திலும் தீபாவளி கொண்டாடினார். இந்த ஆண்டு உத்தரக்கண்ட் மாநிலத்தில் சீன எல்லை அருகில் உள்ள ஹர்சில் என்னுமிடத்தில் தீபாவளி கொண்டாடினார்.

இராணுவ ஹெலிகாப்டரில் சென்ற அவரை இராணுவ அதிகாரிகள் வரவேற்றனர். பொதுமக்களும் பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தனர். இந்தோ திபெத் எல்லைக் காவல்படையினர் மற்றும் இராணுவ வீரர்களுக்கு இனிப்பு வழங்கித் தீபாவளி வாழ்த்துத் தெரிவித்தார்.

இராணுவ வீரர்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, பனிபடர்ந்த உயர்ந்த மலைகளிலே பணியாற்றும் இராணுவ வீரர்களின் கடமையுணர்ச்சி நாட்டை வலிமையாக்குவதுடன், 125கோடி மக்களின் கனவுகளுக்கும் எதிர்காலத்துக்கும் பாதுகாவலாக உள்ளதாகத் தெரிவித்தார். இராணுவ வீரர்கள், முன்னாள் இராணுவ வீரர்களின் நலனுக்காகத் தனது அரசு ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தைச் செயல்படுத்தியதாகத் தெரிவித்தார். ஐ.நா. அமைதி காக்கும் படையில் இந்தியப் படையினர் சிறப்பாகப் பணியாற்றி வருவதை உலகமே பாராட்டியுள்ளதாகவும் மோடி தெரிவித்தார்.

இராணுவ முகாமில் இருந்து ஹெலிகாப்டரில் கேதார்நாத்துக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள கேதார்நாதர் ஆலயத்தில் வழிபாடு நடத்தினார். வழிபாட்டுக்குப் பின் பொதுமக்களைச் சந்தித்துப் பேசினார். கேதார்நாத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களைப் பார்வையிட்டு அவற்றின் நிலையை அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார். அதன்பின் அங்கிருந்து இராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் சென்றார்.

அதேபோல் தீபாவளியை முன்னிட்டு, பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் இந்திய மற்றும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இனிப்புகளை பறிமாறிக் கொண்டனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் திரண்ட இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் பட்டாசு வெடித்தும், நடனம் ஆடியும் கொண்டாடி மகிழ்ந்தனர். பின்னர், பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு, இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் இனிப்புகளை வழங்கினர். அதேபோல், பாகிஸ்தான் வீரர்களும், இந்திய ராணுவ வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர்.

Share