மகாத்மா காந்தியடிகளின் 150 வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் சென்னை விமான நிலையத்தில் காந்தி மூலை அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் உள்நாட்டு வருகை பகுதியில் காந்தியடிகளை நினைவு கூறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியை, இந்திய விமான ஆணையகத்தின் தலைவர் திருமிகு அஞ்சலி மகாபாத்ரா அண்மையில் திறந்து வைத்தார்.

கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள டயல் செய்யும் தொலைபேசியின் ரிசீவரை எடுத்து காதில் வைத்தால் காந்தியின் குரல் கேட்கும். மேலும், மகாராஷ்டிராவில் உள்ள சேவா கிராம் ஆசிரமத்தின் சிறிய மாதிரி, கைராட்டை, கலைப் பொருட்களின் மாதிரிகள், காந்தியடிகளின் தமிழ்நாட்டு வருகையையும், இங்குள்ள தலைவர்கள் மற்றும் பொதுமக்களுடன் அவர் உரையாடுவதையும் காட்டும் புகைப்படங்கள் ஆகியவை இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

பயணிகள், குறிப்பாக அடுத்த தலைமுறைக்கு, தேசத் தந்தையின் வாழ்க்கையையும், பணிகளையும் எடுத்துரைக்கும் விதமாக பிரம்மாண்டமான திரைகளில் காந்தி திரைப்படங்கள், வீடியோக்களும் இங்கு திரையிடப்படுகின்றன. சென்னை விமான நிலையத்திற்கு வந்து போகும் பயணிகளை இந்தக் கண்காட்சி பெரிதும் ஈர்த்துள்ளது.

புது தில்லி ராஜ்காட்டில் உள்ள தேசிய காந்தி அருங்காட்சியகத்துடன் இணைந்து சென்னை  விமான  நிலையம் இந்தக் கண்காட்சியை அமைந்துள்ளது.

Share