தீபாவளி திருநாளான இன்று அகிலமே தீபத்தில் ஒளிர்கிறது. தீபாவளிக்கென்று சில சரித்திரங்கள் உண்டு. ஸ்ரீமத் பாகவதத்தில் நரகாசுர வதம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. விஷ்ணு பரமாத்வாவின் மூன்றாவது அவதாரமான வராஹருக்கும் பூமா தேவிக்கும் பிறந்தவர் தான் நரகாசுரன். வராஹர் அசுரவதம் புரியும் போது, வராஹருக்கும் பூமா தேவிக்கும் பிறந்தவர் என்பதால் இயல்பாகவே அசுர குணம் படைத்தவராக வளர்ந்தார். தனது தவத்தினால் பல விதமான சக்திகளையும் பெற்றிருந்தார். தாயால் மட்டுமே தன்னை வதம் செய்ய முடியும் என்ற வரத்தினையும் பெற்றிருந்தார். நரகாசுரன் பல கொடுமைகளைச் செய்து வந்தான்.

யாராலும் அவரை அழிக்க முடியவில்லை. தனது தாயால் மட்டுமே தன்னை வதம் செய்ய முடியும் என்ற வரத்தை  நரகாசுரன் பெற்றிருந்ததை பகவான் கிருஷ்ணர் உணர்ந்தார். சத்யபாமாவை அழைத்து கொண்டு நரகாசுரனை வதம் செய்ய புறப்பட்டார். நரகாசுரனுடன் போர் புரிந்தார். அப்போது, பகவான் கிருஷ்ணர் மயங்கி விழுவதை போல் நடித்தார். இதனை கண்ட சத்யபாமா, நரகாசுரனின் மீது அம்பை விடுத்தது அவரை வதம் செய்தார். அப்போது தான் நரகாசுரனுக்கு சத்யபாமா தனது தாய் என்ற உண்மை புரிந்தது. பிறகு தனது தவறுகளை உணர்ந்தார் நரகாசுரன். தனது தாயால் வதம் செய்யப்பட்ட நரகாசுரன், தனது இறப்பை அகிலமே ஒளிமயமாக கொண்டாட வேண்டும் என்று பூமாதேவியிடம் கேட்டுக்கொண்டார். அதன் படி, ஒவ்வொரு வருடமும் நரகாசுரன் வதம் செய்யப்பட்ட இந்த திருநாளை தீபாவளியாக கொண்டாடுகிறோம்.

ராமாயணத்தின் படி, ராமபிரான் சீதாப்பிராட்டியுடன் தனது வனவாசத்தை முடித்துக்கொண்டு அயோத்தியா மாநகரம் சென்றடைந்த திருநாளை பாரத தேசமே தீபாவளியாக கொண்டாடுகிறது. தீபாவளியன்று தீபம் ஏற்றுவதன் மூலம், நமது வாழ்வில் இருள் நீங்கி ஒளி தோன்றும் என்பதே ஐதீகம். அதாவது, இருள் என்ற அறியாமை நீங்கி ஒளி என்ற ஞானம் பிறப்பதை தான் தீபாவளியாக கொண்டாடுகிறோம்.  இதை எளிதாக புரிந்து கொள்ள ப்ருஹதாரண்யக உபநிஷத் நமக்கு உதவுகிறது.

மிகவும் தொன்மை வாய்ந்ததாக கருதப்படும் உபநிஷத்தான ப்ருஹதாரண்யக உபநிஷத்தில், பவமான மந்திரங்கள் என்ற மூன்று வாக்கியங்கள் உள்ளன.

அவை,

असतो मा सद्गमय

तमसो मा ज्योतिर्गमय

मृत्योर्मामृतं गमय

“அசத்தோ மா சத்கமய

தமஸோ மா ஜ்யோதிர்கமய

ம்ருத்யோர் மா அம்ருதம்கமய”

சத் என்றால் சத்யம் (வாய்மை) அசத் என்றால் அசத்யம் (பொய்மை). தமஸ் என்றால் இருள், ஜ்யோதிர் என்றால் ஒளி. ம்ருத்யோர் என்றால் இறப்பு, அம்ருதம் என்றால் மோக்ஷம்.

அதாவது, நாம் பொய்மையிலிருந்து விலகி வாய்மையை அடைய வேண்டும். இருளிலிருந்து விலகி ஒளியை அடைய வேண்டும். இறப்பிலுருந்து விலகி மோக்ஷத்தை அடைய வேண்டும். இதில் இருள் என்பது அறியாமையாகவும் ஒளி என்பது ஞானமாகவும் பொருள் படுகிறது. நம் வாழ்வில், இருள் என்ற அறியாமை நீங்கி ஒளி என்ற ஞானத்தை பெறுவதை தான் தீபாவளி பண்டிகை நமக்கு உணர்த்துகிறது.

Share