செய்திகள்

‘கலாச்சாரத்தைப் பின்பற்றும் எந்த ஒரு பெண்ணும் சபரிமலை செல்ல மாட்டார்’- குடியரசுத் துணைத் தலைவரின் மகள்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதி வழங்கி, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.  அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்களும், விஷ்வ இந்து பரிசத் உள்ளிட்ட இந்துத்வா அமைப்பைச் சேர்ந்தவர்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் ஐயப்பன் கோவில் நடை 6 நாள்கள் திறந்திருந்தபோது, போலீஸ் பாதுகாப்புடன் சில பெண்கள் கோயிலுக்கு செல்ல முயன்றனர்.

ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்நிலையில், சித்திரை திருநாள் ஆட்ட விசேசம் என்ற விழாவுக்காக, ஐயப்பன் கோயில் நடை, நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. இதில் பங்கேற்று, ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக,  அதிகாலை முதலே நிலக்கல் பகுதியில் பக்தர்கள் கோவிலை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளனர். முன்னதாக,  இலவங்கல், நிலக்கல், பம்பை, மற்றும் சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதோடு, 2 ஆயிரத்து 300க்கு மேற்பட்ட போலிசார், 20 பேர் கொண்ட கமாண்டோ படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், சன்னிதானம் பகுதியில் 50 வயதுக்கு மேற்பட்ட 15 பெண் போலீசாரை பாதுகாப்புக்கு நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிலக்கல் பகுதியில் வாகனங்களை கடும் சோதனைக்கு உட்படுத்தும் போலீசார், பக்தர்கள் பாதசாரிகளாகவே சபரிமலைக்கு அனுமதிக்கப்படுவர் என கூறியுள்ளனர். இதனிடையே, சன்னிதானம் பகுதியில் ஆகம விதிகளை மீறி, பெண்களை அனுமதித்தால், நடை உடனடியாக சாத்தப்படும் என்று மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மிரட்டல் விடுத்திருந்தார்

இந்த நிலையில் கலாச்சாரத்தைப் பின்பற்றும் எந்த ஒரு பெண்ணும் சபரிமலை செல்ல மாட்டார் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் மகள் தீபா வெங்கட் தெரிவித்துள்ளார். வெங்கையா நாயுடுவின் மனைவி உஷா, மகள் தீபா வெங்கட் ஆகியோர், தஞ்சை பெரிய கோயிலில் வழிபாடு நடத்தினர். அங்கு அவர்களுக்கு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தீபா வெங்கட், பெரிய கோயிலின் கட்டிடக்கலையை புகழ்ந்தார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், குறிப்பிட்ட கால நிர்ணயத்தில் இப்படி ஒரு கோவிலைக் கட்டுவது சாதாரண விஷயம் அல்ல என்றார். சபரிமலை குறித்து பேசிய தீபா வெங்கட், உண்மையான இந்தியப் பெண்ணாக இருக்கும் தாம் உள்பட எந்த ஒரு பெண்ணும் சபரிமலை செல்ல மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

Tags
Show More
Back to top button
Close
Close