ஆங்கிலேயர்கள் நமக்கு சுதந்திரம் அளித்த போது நமது நாடு இப்போதுள்ள ஒருங்கிணைந்த நாடாக இருக்கவில்லை. 600-க்கும் மேற்பட்ட பல்வேறு சமஸ்தானங்களாக சிதறிக் கிடந்தன. மன்னர்கள் குடும்பங்களை சந்தித்து அவர்களை சமாதானப்படுத்தியும், சில மன்னர்களிடம் வாதாடியும், போராடியும்  இன்றைய வலுவான இந்தியாவை உருவாக்கியவர் சர்தார் வல்லபாய் படேல். மகாத்மா காந்தி போராடி சுதந்திரம் பெற்றுத்தந்தார். வல்லபாய் படேல் அவர்களும் போராடி இந்த நாட்டை ஒன்று படுத்தினார். அவர்களால் உருவாக்கப்பட்ட நாட்டை நேரு ஆட்சி செய்தார். ஆனால், படேலின் மாபெரும் பணியை போற்றி கடந்த 60 ஆண்டு கால ஆட்சியில் எதையும் பெரிதாக காங்கிரஸ் அரசு செய்யவில்லை என்பதே உண்மையாகும். இந்திரா காந்தியை இரும்புப் பெண்மணி என வருணித்து பரம்பரை பஜனையை காங்கிரசார் செய்து வந்தனரே ஒழிய, உண்மையில் இரும்பு மனிதர் என மக்களால் போற்றப்பட்ட வல்லபாய் படேலுக்கு காங்கிரசார் மிகப்பெரிய அளவில் எந்த கௌரவத்தையும் செய்து விடவில்லை.

இந்த நிலையில் மகாத்மா காந்தியைப் போல தமது மாநிலத்தில் பிறந்த சுயநலமில்லா தலைவரும், வலிமையான இந்தியாவை கட்டியெழுப்பியவருமான சர்தார் வல்லபாய் படேலுக்கு உலகம் போற்றும் வகையில் ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்தார் நரேந்திர மோடி அவர்கள். மோடி அவர்கள் 2013-ஆம் ஆண்டு தாம் முதல்வராக இருக்கும்போது கண்ட கனவு தான் இன்றைக்கு நனவாகி இருக்கிறது.

சிலை அமைப்பும், சிறப்புகளும்

இந்த நிலையில் குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில், உலகின் மிக உயரமான 182 மீட்டர் உயரம் கொண்ட சர்தார் படேல் சிலையை பிரதமர் நரேந்திர மோடி 31.10.2018 அன்று திறந்து வைத்துள்ளார். 597 அடி அல்லது 182 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிலை தான், உலகின் மிக உயரமான சிலையாக இருக்கும். சீனாவின் ஸ்பிரிங் புத்தர் சிலை தான், தற்போது வரை உலகின் மிக உயரமான சிலையாக திகழ்ந்து வருகிறது. அதைவிட, படேல் சிலை 177 அடி உயரமானதாக இருக்கும். அமெரிக்காவில் இருக்கும் சுதந்திர தேவி சிலையை விட, படேல் சிலை இரண்டு மடங்கு உயரமானது ஆகும். இந்த சிலையை உருவாக்க ₹2,989 கோடி செலவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை பத்ம பூஷன் விருது வென்ற சிற்பி ராம் வி சுதர் வடிவமைத்துள்ளார். லார்சன் அண்டு டர்போ நிறுவனம் மற்றும் சர்தார் சரோவர் நர்மதா நிகாம் நிறுவனமும் இந்த சிலையை அமைக்க உதவி செய்துள்ளன. குஜராத்தில் இருக்கும் சர்தார் சரோவர் அணையிலிருந்து 3.32 கிலோ மீட்டர் தொலைவில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. இரும்பால் செய்யப்பட்ட இந்த சிலைக்காக, பல நாடுகளிலிருந்து சில வகை சிறப்பு இரும்பு பொருள்கள் பெறப்பட்டது. இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான படேல், “இரும்பு மனிதர்” என்று அழைக்கப்பட்டவர் ஆவார். எனவே அவருடைய சிலையும் இரும்பால் மிக பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளது. சிலையின் 193-வது மீட்டரில், மக்கள் பார்க்குபடி வசதி செய்து தரப்பட்டுள்ளது.

ராகுல் காந்தியின் அப்பட்டமான பொய்யுரைகள்

இந்த நிலையில் பிரதமர் மோடி அவர்கள் மீது என்ன குறை காணலாம், எந்த குறை கிடைத்தால் அதை ஊதி பெரிதாக்கி கலகம் செய்யலாம் என காத்துக்கிடக்கும் காங்கிரஸ் கட்சியும், சில எதிர் கட்சிகளும் படேல் சிலை அமைக்கப்பட்ட விஷயத்தில் ராகுல் காந்திக்கு தவறான தகவல்களை கொடுத்து பேச வைக்கின்றனர். அதிலொன்றுதான் இந்த சிலை சீனாவில் செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டது என சொல்லும் பொய் குற்றச்சாட்டு. கடந்த ஒரு மாதமாகவே ராகுல் காந்தி இந்த சிலை தொடர்பாக இதே போன்ற பொய்களை பேசி வருகிறார். இதன் மூலம் நாட்டிலுள்ள சில நெட்டிசன்களை ஏமாற்றி பொய் தகவல்களை பரப்பலாம். ஆனால் உண்மை எதுவென்று குஜராத் மக்களுக்கு 1913-ஆம் ஆண்டிலிருந்தே நன்றாக தெரியும்.

உண்மை தகவல்கள்

சர்தார் படேல் அவர்களின் நினைவாக எழுப்பப்பட்ட இந்த சிலையை உருவாக்க பயன்படுத்தப்பட்ட வெண்கலப் பேனல்கள் மட்டுமே சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும். சிலைக்கான மொத்தப் பணிகளில் 9 சதவீத ஒத்துழைப்பு மட்டுமே சீனாவிலிருந்து பெறப்பட்டது. மற்றபடி அனைத்தும் இந்திய வல்லுனர்கள் சார்ந்த பணிகள் மட்டுமேயாகும்.

இந்த திட்டத்தை நிறைவேற்றிய நிறுவனமான லார்சன் & டூப்ரோ (L & T), பல சந்தர்ப்பங்களில் இந்த சிலை அமைப்பு பணிகள் பற்றி தெளிவுபடுத்திய போதிலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அந்த சிலை கடந்த மாதம் சீனாவில் கட்டப்பட்டது என்றும், காலணி மற்றும் சட்டைகளைப் போல சீனாவில் தயாரிக்கப்பட்டு இந்தியா வந்துள்ளதாக சின்னக் குழந்தைபோல பேசி வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று சிலை திறந்த நாளன்றும் ராகுல் காந்தி எழுப்பிய அதே கேள்விகளை சிலர் எழுப்பியுள்ளனர். எனவே வெளியே சொல்லப்படாத தகவல்களையும், உண்மைகளையும் கூறவேண்டிய அவசியத்தின் அடிப்படையில் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

நாட்டு ஒற்றுமைமையை நினைவுபடுத்தும் இந்த சிலை மூன்று அடுக்கு அமைப்புகள் உடையது ஆகும். உள் அடுக்கு 127-மீட்டர் உயரமான வலுப்படுத்திய சிமெண்ட் மற்றும் கான்கிரீட்டை கொண்டவை. ஒரு இரும்பு உலோகம் அமைப்பின் இரண்டாவது அடுக்காக அமைந்துள்ளது. மூன்றாவது மற்றும் வெளிப்புற அடுக்கு வெண்கல உறைப்பூச்சு வடிவத்தில் உள்ளது, இது படேலின் துணிகள், தோரணை மற்றும் முகபாவங்களை எடுத்துச் சொல்கிறது. இந்த கட்டத்தில்தான் இந்த வெண்கலம் தொடர்பான சில லேயர் நுட்ப பணிகள் சீனாவில் செய்யப்பட்டன.

இந்த சிலை அமைப்பதற்கு முன்பு இந்தியாவில் உள்ள 15 பெரிய வெண்கலம் தொடர்பான கம்பெனிகளில் லார்சன் & டூப்ரோ (L & T)  நிறுவனம் ஆய்வு செய்தது. ஆனால், இது உலகிலேயே மிகப்பெரிய சிலை அமைக்கும் பணி என்பதால், அந்த பணிக்கேற்ற அடிப்படை வசதிகளை இங்குள்ள சிலை அமைக்கும் நிறுவனங்கள் கொண்டிருக்கவில்லை. அதாவது பிரம்மாண்ட சிலைக்கான வெண்கல உறைப்பூச்சு கட்டும் திறனை நம்  நிறுவனங்கள் கொண்டிருக்கவில்லை. எனவே தான், உலகத்தில் உள்ள பல நாடுகளிலிருந்து சிலை தொடர்பான பணிகளுக்காக எல் அண்ட் டி நிறுவனம் டெண்டர் கோரியிருந்தது. அப்போது தான், சீனாவின் ஜியாங்சி டோக்கியின் மெட்டல் கைஃப்ட்ஸ் கார்ப்பரேஷன் என்ற உலகின் மிகப்பெரிய வெண்கல நிறுவனத்தை கண்டறிந்தனர். பல நாடுகளில் இருந்து டெண்டர் கோரப்பட்டு பிறகுதான் மேற்கண்ட சீன நிறுவனத்துக்கு இந்த நிறுவனத்தினர் தரம் மற்றும் விலையின் பேரில் ஆர்டர் அளித்தனர். இந்த வேலைத் திட்டத்தின் மொத்த மதிப்பில் 9 சதவிகிதம் மட்டுமே சீன நிறுவனத்திடம் தரப்பட்டிருந்தது. இது குறித்து 2015-ஆம் ஆண்டிலேயே லார்சன் & டர்போ அதிகாரிகள் கூறுகையில் “இந்த சிலை முழுவதுமே இந்தியாவில் தான் கட்டப்பட உள்ளது. வெண்கல அடுக்கு தொடர்பான பணிகளை மட்டுமே சீனா மேற்கொள்கிறது. இது மொத்த திட்டத்தின் மொத்த மதிப்பில் 9 சதவீதத்திற்கும் குறைவான தொகையாகும்.” என்றனர்.

சீன நிறுவனத்தை தொடர்பு கொள்வதற்கு முன்பே பல்வேறு இந்திய நிறுவனங்கள் அணுகப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது மிகப்பெரிய, உலகிலேயே பிரம்மாண்ட நுட்பம் வாய்ந்த சிலை என்பதால் அனைத்துப் பணிகளையுமே இந்திய நிறுவனங்கள் மேற்கொள்ளவில்லை என்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிலையை அமைப்பதற்கு தேவையான பல பொருள்களை வாங்குவதற்கு மோடி அழைப்பு விடுத்திருந்தார். ஜெய் கிசான், ஜெய் ஜவான் என்று முழங்கி விவசாயிகளையும், இராணுவத்தினரையும் பெருமை படுத்தி வலிமையான இந்தியாவை உருவாக்கிய பட்டேல் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் இந்த சிலைக்கான இரும்பு பொருள்களை திரட்ட விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தார். மோடியின் அழைப்பை ஏற்று நாட்டின் 7 இலட்சம் கிராமங்களிலிருந்து விவசாயிகள் தங்கள் புனிதமான விவசாய மண்ணையும், கழிவு இரும்புகளையும் 1000 லாரிகள் மூலம் அனுப்பி வைத்தனர். இதன் மூலம் 135 டன் இரும்புகள், சிலை அமைப்புக்கு தேவையான பாரதத்தின் புனித மண் பல்வேறு இந்திய கிராமங்களிலிருந்து பெறப்பட்டது.

2,10,000 கனமீட்டர் சிமென்ட் கான்கிரீட், 18,500 டன் வலுவூட்டப்பட்ட எஃகு, 6,500 டன் கட்டமைப்பு எஃகு, 1,700 டன் வெண்கலம் ஆகியவற்றை பயன்படுத்தி இந்த பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஷிப்டுகளில் இரவு பகலாக இந்த வேலைகள் கடந்த 2 ஆண்டுகளாக மும்முரமாக நடைபெற்றது.

4,076 மனித நாள் உழைப்புகளில், 200 நாள் மனித உழைப்பு மட்டுமே சீனாவில் இருந்து பெறப்பட்டன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் உட்பட சுமார் ஆயிரம் ஆண் தொழிலாளர்கள் கொண்ட குழுவினர் சிலை அமைப்பு இடத்திலேயே பணி புரிந்தனர்.

95 சதவிகிதத்திற்கும் அதிகமான இந்திய தொழிலாளர்களால் இந்த சிலை கட்டப்பட்டுள்ளது. ஒரு சிறிய அளவில் ஒரு தொழில் நுட்ப ஒத்துழைப்பு நமது நாட்டிலிருந்தே பெறப்பட முடியாத நிலையில் மட்டுமே சீன நிறுவனத்திடமிருந்து ஒத்துழைப்பு பெறப்பட்டது என்பதே உண்மையாகும். ராகுல் காந்தி கூறி வரும் பொய்யைப் போல சீனாவிலிருந்து காலணிகள், துணிகள் இறக்குமதி செய்யப்படுவதைப் போல இந்த உலகிலேயே பிரம்மாண்டமான, ஒப்பற்ற சிலை இறக்குமதி செய்யப்படவில்லை. ராகுல் காந்தி இதேபோல் தான், அடிப்படை ஆதாரம் இல்லாமல் ரபேல் விமான விவகாரத்திலும் தேவையற்ற குற்றச்சாட்டுக்களை கூறி மக்களை குழப்ப முயற்சி செய்தார். மக்களிடம் அந்த பாட்சா பலிக்கவில்லை. அதேபோல படேல் சிலை விவகாரத்திலும் மக்களை குழப்புகிறார் என்பதே உண்மையாகும்.

சர்தார் படேலுக்கு செய்யப்பட்ட மிகப்பெரிய கெளரவத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் இந்த பிரச்சாரம் நேரு-காந்தி குடும்பத்தினரால் முன்னெடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

இந்த கட்டுரையின் பெரும்பகுதி ஸ்வராஜ்யா இதழின் கட்டுரையில் இருந்து தொகுக்கப்பட்டவை.

Share