செய்திகள்

ஏர்செல் – மேக்சிஸ் முறைகேடு – தப்பி பிழைக்கும் தந்தையும், மகனும்

கடந்த 2006 ஆம் ஆண்டு, மொரீஷியஸின் குளோபல் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் (மேக்சிஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனம்) இந்தியாவில், ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்ய அனுமதி கோரியிருந்தது. இதற்கான அனுமதியை, பொருளாதார விவகாரங்களுக்கான கேபினெட் கமிட்டி தான் தர வேண்டும். ஆனால் நிதி அமைச்சகத்திடம் இருந்து அனுமதி வழங்கப்பட்டது. அப்போது நிதி அமைச்சராக இருந்தது ப.சிதம்பரம். இதுதான் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காரணமாக இருந்தது. ஏர்செல் – மேக்சிஸ் ஒப்பந்தத்திலும், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கிலும் ப.சிதம்பரத்தின் பங்கு குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.இதில் விதிமுறைகளை மீறி ஏர்செல் நிறுவனத்தில் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும், இந்த முறைகேட்டுக்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு தொடர்பான வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ.யும், மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரி இருவரும் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு செய்த நிலையில், அவர்களை அக்டோபர் 8ஆம் தேதி வரையும், பின்னர் நவம்பர் 1ஆம் தேதி வரையும் கைது செய்ய தடை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், முன்ஜாமீன் வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ப.சிதம்பரம் நேரில் ஆஜரானார். அவரையும், கார்த்தி சிதம்பரத்தையும், கைது செய்வதற்கான  தடையை, நவம்பர் 26ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக ஏர்செல் மேக்சிஸ் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது. இது தொடர்பாக சிதம்பரம் முன்ஜாமீன் கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்கு, அமலாக்கத்துறை சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. அதில், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காமல் சிதம்பரம் மழுப்பலாக பதிலளிப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இந்த நேரத்தில் சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்கினால் விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் முன்ஜாமீன் வழங்க கூடாது என்றும் அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. அதையும் மீறி கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More
Back to top button
Close
Close