சிறப்பு கட்டுரைகள்

சிதறுண்ட இந்தியாவை அகண்ட பரதமாக்கிய படேலுக்கு உலகம் வியக்கும் வெகுமதி கொடுத்த பிரதமர்.!

பல்வேறு சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்த இந்தியாவை ஒரே நாடாக மாற்றிய பெருமை வல்லபாய் படேலை சேரும். இவரது பிறந்த தினம், தேசிய ஒற்றுமை தினமாக  இன்று  (அக்டோபர் 31) கொண்டாடப்படுகின்ற நிலையில், இந்த நாளை வரலாற்றில் நினைவு கூறும் வகையில் குஜராத் மாநிலத்தில் சுமார் மூவாயிரம் கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்ட உலகின் மிகப்பெரிய வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்பணித்துள்ளார்.

படேல் பிறப்பு:

குஜராத் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கரம்சாத் என்ற கிராமத்தில் 1875, அக், 31ல் படேல் பிறந்தார். பள்ளிப் படிப்பை நிறைவு செய்த இவர், வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பதற்காக, வேலை பார்த்து பணம் சேர்த்தார். “பாரிஸ்டர்’ பட்டம் பெறுவதற்காக இங்கிலாந்து சென்றார். வறுமை காரணமாக கல்லுாரியில் உடன் படித்த மாணவர்களின் புத்தகங்களை கடன் வாங்கி படித்து, இரண்டே ஆண்டுகளில் படிப்பை முடித்து இந்தியா திரும்பினார்.

சுதந்திர போராட்டத்தில்:

படேல் வழக்கறிஞராக பல போராட்டங்களில் ஈடுபட்டார். பின் காங்.,கட்சியில் இணைந்து, சுதந்திரபோராட்டத்தில் களமிறங்கினார். காந்திஜியின் உப்பு சத்யாகிரக போரட்டத்தில், இவரது பங்கு முக்கியமானது. இதனால் சிறை சென்றார். காந்திஜி கொண்டு வந்த ஒத்துழையாமை இயக்கத்தின் படி, வெளிநாட்டு ஆடைகளை புறக்கணித்ததுடன், மகன், மகள் வைத்திருந்த வெளிநாட்டு ஆடைகளையும் துாக்கி எறிந்தார். 1931ல் கராச்சியில் நடந்த மாநாட்டில் காங்கிரஸ்  கட்சி தலைவரானார். 1942, ஆகஸ்ட் 9ல், வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தார். உடல்நிலை மோசமாக இருந்த போதும், போராட்டத்தில் கலந்து கொண்டார். இதற்காக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட இவர், 1945 ஜூன் 15ல் விடுதலையானார். 1946 காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில், காந்திஜி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, நேருவுக்கு வழி விட்டு, வல்லபாய் படேல் ஒதுங்கினார்.

 

“ஒரே இந்தியா’ எப்படி சாத்தியம்:

1947 ஆம் ஆண்டு, ஆகஸ்டுத் திங்கள் 15 ஆம் நாள் நள்ளிரவில் பிரிட்டிஷார்நமக்கு சுதந்திரம் வழங்கி விட்டார்களே தவிர, நாடு அப்போதும் ஜெனரல் மவுண்ட் பேட்டர்ன் ஆட்சியின் கீழ் தான் இருந்தது. ஏனெனில், ஒரு நாடு தன்னிறைவு பெற்று தனது மக்களின் பாதுகாப்பையும், பொருளாதாரத் தேவைகளையும், தனி மனித உரிமைகளையும், ஒட்டுமொத்த சமூகப் பாதுகாப்பையும் உறுதி செய்து மக்களை சமரசத்துடன் ஆள்வதற்கான அரசியலமைப்புச் சட்டங்கள், கொள்கைகள் என தெளிவான எந்த ஒரு வரையறையும் அப்போது இந்தியாவிடம் இல்லாமலிருந்தது. முதலில் அதைஉருவாக்கியாக வேண்டும். அதுவரை இந்தியா சுதந்திர நாடே தவிர ஜனநாயக நாடு இல்லை. எனவே சுதந்திர இந்தியாவின் முதல் கடமை சிதறுண்டிருக்கும் பிரதேசங்களை இணைத்து முதலில் ஒரு குடைக்கீழான ஆட்சித் தத்துவத்திற்கு ஒப்பான ஒருங்கிணைந்த இந்தியா உருவாக வேண்டும்.

565 சமஸ்தானங்கள் படேல் கையில்:

இந்தியா சுதந்திரம் பெற்ற போது, 565 சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்தது.இதைத்தவிர பாண்டிச்சேரி, கோவா, கேரளாவின் சில பகுதிகள், காரைக்கால், மாஹி, ஏனாம் உள்ளிட்ட பகுதிகளில் ஃப்ரெஞ்சு மற்றும் போர்த்துகீசியர்களின் காலனி ஆதிக்கமும் இருந்து வந்தது. இவை சுதந்திர பகுதிகளாகவே மீண்டும் அறிவிக்கப்பட வேண்டும் என, சமஸ்தான ஆட்சியாளர்கள் கோரினர். இவற்றை ஒருங்கிணைப்பது புதிய இந்திய அரசுக்குச் சவாலாக இருந்தது. முரண்டு பிடிக்கும் சமஸ்தான அரசுகளை இணைத்து ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கும் பொறுப்பு அன்றைய உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல், வி.பி.மேனன் மற்றும் அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக இருந்த  மவுண்ட் பேட்டன் ஆகிய மூவரிடமும் ஒப்படைக்கப்பட்டது.

படேல் தொடங்கிய அதிரடி நடவடிக்கை:

படேல் சாம, தான, தண்டம் எனும் மூவகைப் பிரயத்தனங்களைப் பயன்படுத்தி பிரிந்து கிடந்த சமஸ்தானங்களை ஒன்று சேர்க்க படாத பாடுபட்டார். பிகானிர், பாட்டியாலா,குவாலியர், பரோடா முதலிய சமஸ்தானங்கள் உடனடியாக இணைந்தன. பெரும்பாலான சமஸ்தானங்கள் தாமாகவும், சில பேச்சுவார்த்தையின் மூலமும்இணைக்கப்பட்டன. படேலின் விடாமுயற்சியால் 552 சமஸ்தானங்கள் இணைந்தன. தமிழகத்தில் இருந்த ஒரே சமஸ்தானமான புதுக்கோட்டை, 1948, மார்ச் 3ல் இணைந்தது. காஷ்மீர், ஐதராபாத், திருவாங்கூர், ஜூனாகத் போன்ற சில சமஸ்தானங்கள் இணைய மறுத்தன. இதையடுத்து ராணுவத்தை அனுப்பி, அப்பகுதிகளை இந்தியாவுடன் இணைத்தார் படேல். இப்படி துண்டு, துண்டாகக் கிடந்த இந்திய சமஸ்தானங்களை ஒன்றிணைத்து ஒரே இந்தியா உருவாக காரணமாக இருந்ததால் படேல் இந்தியாவின் ‘இரும்பு மனிதர்’ என போற்றப்படுகிறார்.

நாடு போற்றும் மனிதருக்கு பிரதமர் மோடி கொடுத்த வெகுமதி:

ஒருங்கிணைந்த இந்தியா கட்டமைய காரணமாக இருந்த வல்லபாய் படேலை சிறப்பிக்கும் பொருட்டு உலகிலயே மிகப்பெரிய அவரின் திருவுருவ சிலையை நிர்மாணிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி முன்வைத்தார். குஜராத் மாநில முதல்வராக 10 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் 2010-லேயே படேல் சிலை பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் மோடி. பின்னர் 2013-ல் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போதும் படேலுக்கு பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என்ற வாக்குறுதியைத் தந்தார். அப்போதே சிலைக்கான அடிக்கல்லையும் நாட்டினார். மோடி பிரதமர் ஆன பின்னர் மத்திய அரசின் நிதியுதவி மூலமும் இந்தச் சிலையை நிறுவ உத்தரவிட்டார். இதோடு நிற்கவில்லை. இந்த சிலைக்காக நாடு முழுவதுமிலிருந்து இரும்பு சேகரிக்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். மோடி பிரதமர் ஆன பின்னர் 2017-ல் பல்கலைக்கழக மானிய கமிஷனிடமிருந்து ஓர் உத்தரவு வருகிறது. உயர் கல்வி நிறுவனங்கள் படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31-ல் ஒற்றுமை ஓட்டம் நடத்த வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இந்த ஒற்றுமை ஓட்டத்தை கொடியசைத்து பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அன்றிலிருந்து படேல் சிலை நிர்மாணிக்கும் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டு இன்று திறப்பு விழாவை கண்டுள்ளது.

படேல் சிலையின் வரலாற்று பின்னணி:

சர்தார் படேலின் 143வது  பிறந்த தினமான (31-12-2018) இன்று இதைத் திறக்க வேண்டும் என்ற முனைப்புடன்  பிரதமர் மோடி மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் விளைவாக இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க நாளாக அமைந்துள்ளது. மைக்கேல் க்ரேவ்ஸ் ஆர்க்கிடெக்சர் அண்ட் டிசைன் என்ற நிறுவனம் இதன் வடிவமைப்பு மற்றும் நிர்மாணிப்பை மேற்பார்வையிட்டு வருகிறது.

ராம் வி.சுதார் என்பவர் இந்தச் சிலையை வடிவமைத்துள்ளார். இச்சிலை வரலாறு காணும் மிகப் பெரிய கலைப் பொக்கிஷம் என புகழப்படுகிறது. குஜராத்தில் உள்ள நர்மதா மாவட்டத்தீல் சர்தார் சரோவர் அணை அருகே சாது பெட் என்ற பெரிய தீவில் இது அமைக்கப்பட்டுள்ளது. இதை அமைக்கும் நிபுணர்களில் ஒருவரான ஜேம்ஸ் விஸ்னியூஸ்கி (James Wisneewski)  ‘இந்தச் சிலை முடிந்த பின்னர் இதைப் பார்க்கும அனைவரும் பிரமித்துப் போவர். இந்தச் சிலை தண்ணீரில் நடப்பது போல இருக்கும்’என்று சிலை நிர்மாணிக்கும் பணி ஆரம்பிக்கும் பொழுதே ஆரூடம் கூறினார். இந்தத் தீவில் மியூஸியம், தோட்டம்,  ஹோட்டல், வருவோரை வரவேற்க வரவேற்பு மையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இடம் பெறுகிறது. சிலை அமைக்கப்பட்ட இடத்தின் பரப்பளவு சுமார் 20000 சதுர மீட்டர். இதைச் சுற்றி 12 கிலோமீட்டருக்கு ஒரு செயற்கை ஏரி உருவாக்கப்படுகிறது.

சிலையை அமைக்க ஆகும் உத்தேச செலவு ஆரம்பத்தில் 2083 கோடி என்று மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் குறைந்த பட்ச தொகையாக 2989 கோடி ரூபாயில் இதைக் கட்ட லார்ஸன் அண்ட் ட்யூப்ரோ அமைப்பு ஒத்துக் கொண்டு டெண்டரைப் பெற்றது. இந்தப் பணத்தில் பெரும் பங்கை குஜராத் அரசே ஏற்றது. சிலைக்கு பயன்படுத்தப்பட்ட ரெய்ன்ஃபோர்ஸ்ட் சிமெண்ட் மட்டும் 75000 கியூபிக் மீட்டர் ஆகும்.

5700 மெட்ரிக் டன் ஸ்டீல், 185000 டன் ஸ்டீல் கம்பிகள், 22500 டன் வெங்கலத் தகடுகள் சிலை அமைக்க பயன்படுத்தப்பட்டது.

ஸ்டீலினாலும் ரெய்ன்ஃபோர்ஸ்ட் கான்கிரீட்டினாலும் அமைக்கப்படும் சிலையின் மீது வெண்கலப் பூச்சு இடம்பெற்றுள்ளது. அறிவியல் வியக்கும் ஒரு சிலையாக அமைந்துள்ள இந்தச் சிலை இருக்கும் இடத்திற்கும் பிரதான நகர் பகுதிக்கும் இடையே ஒரு பாலமும் அமைகிறது.. சிலையை அடைய 5 கிலோ மீட்டர் படகு சவாரி செய்ய வேண்டும். சிலையில் 500 அடி உயரத்தில் பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வசதியாக ஒரு மையம் இருக்கிறது. அங்கு ஒரே சமயத்தில் 200 பேர் இருந்து அழகிய காட்சிகளைக் கண்குளிரக் காணலாம். இங்கிருந்து சாத்புரா, விந்த்யாசல மலைத் தொடரைப் பார்த்து மகிழலாம். உலகின் உயரமான சிலை அமைந்துள்ளதை பார்த்து வியக்கும் வெளிநாட்டின் பிரபல பத்திரிகைகளும், தொலைக்காட்சி சேனல்களும் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து இது பற்றிய செய்திகளை வெளியிட்ட வண்ணம் உள்ளன.

‘ராஷ்ட்ரீய ஏகதா திவஸ்’ அதாவது தேசிய ஒருமைப்பாடு தினம் என்று அழைக்கப்படும் படேலின் பிறந்த தினத்தை இந்திய அரசு 2014ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடி வருகிறது. இன்றைய நாளான 2018  அக்டோபர் 31 இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய தினமாக அமையப் போகிறது. கடுமையான சோதனைகளை எதிர்த்து இந்தியாவை ஓரிழையில் இணைத்துச் சாதனை புரிந்த சாதனை மனிதருக்குச் சரியான நினைவுச் சின்னமாக அமையும் படேலின்  ‘அமைதிக்கான சிலை’ இது உலகின் அதி உன்னதமான உயரமான சிலை என்ற பெருமையை பெறுகிறது.

Tags
Show More
Back to top button
Close
Close