சிறப்பு கட்டுரைகள்

தேவர் ஜெயந்தியில் ஐயா முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை ஒரு பார்வை!

முத்துராமலிங்கத் தேவர் அக்டோபர் 30, 1908-ஆம் ஆண்டு தென் தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் பிறந்தார். ஆன்மிகவாதியாகவும் சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும் சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். ஆன்மிகம், தேசியம், பொதுவுடைமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் அல்லாத ஆட்சி ஆகியன இவரது முக்கிய கொள்கைகளாக இருந்தன. ஒரு தேசியவாதியாக திராவிடர் கழகம் மற்றும் அதன் வழி கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் ஆகியனவற்றை அவற்றின் பிரிவினை வாதம் மற்றும் குறுகியநோக்கு போன்ற கொள்கைகளுக்காக வெறுத்தார். கடவுள் மறுப்புக் கருத்துக்களை அடித்து நொறுக்கும் கேள்விகளை முன் வைத்தார். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் ஆங்கில அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்தார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்றும் அறியப்பட்ட இவர் அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழகத் தலைவராகவும் தேசியத் துணைத் தலைவராகவும் இருந்தார். இக்கட்சி நேதாஜி தேவருடன் இணைந்து துவக்கியதாகும். தேவர் மூன்று முறை இக்கட்சி சார்பாக இந்திய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

கல்வி வாழ்க்கை

ஆறு வயதில் கல்வி வாழ்க்கை தொடங்கியது. 1917-ஆம் ஆண்டு கமுதியில் இருந்த அமெரிக்க மிசன் ஆரம்பப்பள்ளியில் சேர்ந்து பயின்று வந்தார். முத்துராமலிங்க தேவர் இயற்கையாகவே பல நல்ல குணநலன்களைப் பெற்றிருந்தார். இளமையிலேயே சொற்களை திருத்தமாக பயின்று வந்தார். இளமை முதற்கொண்டு திருநீரு பூசும் பழக்கத்தை கடைபிடித்து வந்துள்ளார். 1924-ஆம் ஆண்டு தமது ஐந்தாம் வகுப்பை முடித்தார். உயர்நிலைக்கல்வி கற்பதற்காக, இப்போது மதுரையில் புகழ் பெற்று விளங்கும் (U.C.School) ஐக்கிய கிருஸ்தவ உயர் நிலைப்பள்ளியில் போய்ச் சேர்ந்தார். ஒருநாள் சிறுவனாக இருந்த முத்துராமலிங்கத் தேவரிடம், ஆசிரியராக இருந்த ஒரு கிறிஸ்தவ பாதிரியார்,  “நீ இந்து. உன்னை ஒன்று கேட்கிறேன்… இதோ இங்கே கீழே கிடக்கிறதே இந்தக் கல்லும் தெய்வமா?” என்று சிறு கல் ஒன்றை எடுத்துக்காட்டிக் கேட்டார். அதற்கு சிறிதும் முகமாற்றமில்லாமல் சிரித்தபடியே முத்துராமலிங்கத் தேவர் பதில் சொன்னார்:

“ஐயா… ஒரு கல்லில் துணி துவைக்கலாம். ஒரு கல்லில் அம்மி அரைக்கலாம்… மற்றொரு கல்லில் சுவாமி சிலை வடிக்கலாம். ஆனால், துணி துவைக்கும் கல்லில் துணியை மட்டும் தான் துவைக்கமுடியும். அதை கடவுளாகத் தொழ முடியாது. அதேபோல அம்மிக்கல்லை அரைக்க பயன்படுத்துவதை விட்டுவிட்டு, கடவுளாக யாரும் கும்பிட மாட்டார்கள். சுவாமி சிலையும் அப்படித்தான்… அது வணங்குவதற்காக, தொழுவதற்காக மட்டும் தான். அதில் துவைக்கவோ, அரைக்கவோ முடியாது. ஆக… கல் என்பது ஒன்று தான். அதில் மூன்று விதமான செயல்கள் நிகழ்கின்றன. அதனால், கீழே கிடக்கிற இந்தக் கல்லை எடுத்து இதுவும் தெய்வமா என்று நீங்கள் கேட்டால் எப்படிய்யா…?” சிறுவனான முத்துராமலிங்கத் தேவர் இப்படிக் கேட்க, அவரின் விளக்கத்தால் வாயடைத்துப்போன பாதிரியார், அன்றிலிருந்து தேவருக்கு பள்ளிக்கூடத்தில் இரட்டிப்பு மதிப்பைக் கொடுக்கத் துவங்கினார்.

குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டம்

தென்னக அரசியலில் தேவர் கையில் எடுத்த இந்த குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்கிற ஆயுதம் இவர் மீது தனித்தன்மையான அரசியல் நோக்கினை உண்டாக்கியது. 1920-ஆம் ஆண்டில் இருந்து அப்போதைய மதராஸ் மாகாணத்தில் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமலில் இருந்த குற்ற பரம்பரை சட்டம் என்கிற சட்டத்திற்கு எதிராக தேவர் முதன் முதலாக போராடினார். இவரின் அரசியல் பிரவேசத்திற்கு பின்பு தான் இந்த போராட்டம் உச்சகட்டம் எட்டியது. இந்த சட்டத்தினை எதிர்க்கும்படி விழிப்புணர்ச்சி உண்டாக்கும் வண்ணம் இவர் மேற்கண்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் நிகழ்த்தி மக்களை திரட்டினார்.

மிகப்பெரிய பிரச்சாரத்தினை கிராமங்கள் தோறும் நிகழ்த்தி மக்களை திரட்டி போராடினார். இந்த போராட்டத்தில் தேவருடன் இருந்த Dr.P.வரதராஜுலு நாயுடு, பெருமாள் தேவர், சசிவர்ண தேவர், மற்றும் நவநீதக்ருஷ்ண தேவர் ஆகியோர் இணைந்த சமாதான பேச்சுவார்த்தை குழு நியமிக்கப்பட்டு அப்போதைய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆகிலும் இந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தோல்வியால் இந்த சட்டம் ஆங்கில அரசினால் நீக்கப்படவில்லை. பின்னாளில் மீண்டும் தேவரின் தலைமையில் போராட்டம் சீற்றமடைந்து இந்த சட்டம் நீக்கப்பட்டது.

அரசியல் பிரவேசம்

1936-ஆம் ஆண்டு மாவட்ட வாரிய தலைவரானார். 1937-ஆம் ஆண்டு நடந்த மதராஸ் மாகாண தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் தேவர் அவர்கள் இளைஞர்களை கட்சிக்கு உழைத்திட திரட்டினார். 1937-ஆம் ஆண்டு பிப்ரவரியில் இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார். இவரது அரசியல் வளர்ச்சியை கண்டு பயந்து போன ஆங்கிலேய நீதி கட்சியரசு பலம் வாய்ந்த எதிர் வேட்பாளராக இராமநாதபுர மன்னர் அவர்களை நிறுத்தியது. ஆனாலும் முத்துராமலிங்க தேவர் அந்த தேர்தலில் மன்னரை எதிர்த்து மாபெரும் வெற்றி பெற்றார். அதுமட்டுமின்றி தேவர் தாழ்த்தப்பட்டவருக்காக ஆலயப் பிரவேசம் நடத்தினார்.

இறுதி நாட்கள்

1962-இல் மீண்டும் லோக் சபா தேர்தலுக்கு தேவர் முன்னிறுத்தப்பட்டார். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் தேவர் ஒரேயொரு பிரச்சார மேடையில் மட்டுமே தோன்றினார். C.ராஜகோபாலசாரியார் அவர்களும் தேவரும் இணைந்து தோன்றிய கடைசி பிரச்சார மேடை இதுவே ஆகும். தேவர் மீண்டும் இந்த தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு உடல் நலக்குறைவின் காரணமாக அப்போது நடைபெற்ற கூட்ட தொடரில் பங்கேற்க டெல்லி செல்ல முடியவில்லை. உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 1963-ஆம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி அதிகாலை 5 மணியளவில் மரணமடைந்தார். அவரது உடல் மறுநாள் அதாவது அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன்னில் வள்ளலாரின் முறைப்படி பூஜை நடத்தி அமர்ந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டது.

கொள்கைகள்

ஆன்மிகம், தேசியம், பொதுவுடைமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் அல்லாத ஆட்சி ஆகியன இவரது முக்கிய கொள்கைகளாக இருந்தன. ஒரு தேசியவாதியாக திராவிடர் கழகம் மற்றும் அதன் வழி கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் ஆகியனவற்றை அவற்றின் பிரிவினை வாதம் மற்றும் குறுகிய நோக்கு போன்ற கொள்கைகளுக்காக வெறுத்தார். கடவுள் மறுப்புக் கருத்துக்களை அடித்து நொறுக்கும் கேள்விகளை முன் வைத்தார். அவரது கேள்விகளுக்கு கடவுள் மறுப்பு பேசியோரால் பதில் சொல்ல இயலவில்லை. அதே நேரம் தேவர் லெனினிசம்-மார்க்சிசம் இரண்டையும் ஏற்றுக்கொள்ளவில்லை. சுபாஷ் சந்திர போஸ் நம்பிக்கை கொண்ட சோஷலிஸ கருத்துக்களில் நம்பிக்கை கொண்டவராக இருந்தார்.

தேவருக்காக தமிழக அரசின் வெகுமதி

தலைசிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது. பசும்பொன்னில் மூன்று நாட்கள் கோலாகலமாக நடக்கும் தேவர் குருபூஜை விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், முளைப்பாரி செலுத்துதல், முடிக்காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், தீச்சட்டி எடுத்தல், அபிஷேகம் செய்தல் ஆகிய செயல்களின் மூலம் தேவரை வணங்குகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தமிழக அமைச்சர்களும் வருடம்தோறும் கலந்துகொண்டு தேவரை வணங்குகின்றனர். அந்த வகையில் இந்த வருடம் தேவரின் 111-வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை விழா தமிழக அரசால் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

Tags
Show More
Back to top button
Close
Close