நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில் தி.மு.க தலைவர் ஸ்டாலினின் தெளிவற்ற நடவடிக்கைகளால் தி.மு.க தொண்டர்களிடம் பெரும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் பொறுப்பாளர்களாக தொகுதிக்கு இருவர் வீதம் எண்பது பேரையும், பூத் கமிட்டிகளை ஆய்வு செய்வதற்காக பன்னிரு எம்.எல்.ஏ-க்களையும் அறிவித்துள்ளது தி.மு.க தலைமை. இதில் நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் பலர் அரசியலில் புதியவர்கள் எனவும் தேர்தல் பணிகளில் முன் அனுபவம் அற்றவர்கள் எனவும் அதிருப்தி குரல்கள் எழத் தொடங்கியுள்ளன.

குறிப்பாக கொங்கு மண்டலத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் பதவியை ராஜினாமா செய்யும் அளவிற்கு விவகாரமாகி உள்ளது.

1996-ஆம் ஆண்டிற்குப் பிறகு கடந்த 23 ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் ஒரு முறை கூட தமிழக சட்டசபையில் 100 இடங்களை தாண்டாத தி.மு.க 2006-இல் மட்டும் கூட்டணி கட்சிகளின் தயவில் மைனாரிட்டி அரசை அமைத்தது. இன்றைய சூழலில் பா.ம.க, தே.மு.தி.க கட்சிகள் கதவை அடைத்து விட்ட நிலையில் காங்கிரஸ் உடனான உறவும் சுமூகமாக இல்லை. அ.தி.மு.க பிளவு பட்டு முக்கிய எதிர்க்கட்சியாக தி.மு.க இருந்தும் ஆர்.கே நகரில் பெற்ற வாக்குகள் அக்கட்சிக்கு பேரிடியாக அமைந்தது. ஆனால் ஸ்டாலின் இன்னமும் கள யதார்த்தத்தை உணர்ந்ததாக தெரியவில்லை. மேலும் சமீப காலமாக தமிழகத்தில் நிகழ்ந்து வரும் பெரும்பான்மை இந்து மக்களின் எழுச்சியும், ஒற்றுமையும் தி.மு.க-வுக்கு பெரும் பாதகமாக அமையும் நிலை ஏற்பட்டுள்ளது.

தி.மு.க தொண்டர் ஒருவரிடம் இது குறித்து  கேட்ட போது அவர் கலைஞரின் நெகிழ்வுத்தன்மையே தி.மு.க-வின் பலமாக இருந்தது, மூத்த நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்வார். ஆனால் தளபதியோ ஜெயலலிதா பாணியில் அதிரடி அரசியல் செய்ய நினைப்பது தான் புதிராக உள்ளது என்றார்.

ஏற்கனவே தொடர் தோல்விகள், குடும்ப தலையீடு, இந்து மத விரோதம், கோஷ்டி பூசல், ஸ்திரமற்ற கூட்டணி என தத்தளிக்கும் தி.மு.க-வுக்கு இந்த தேர்தல் பெரும் சோதனைக்களமாக தான் இருக்கும் என்கின்றனர் அரசியல் வல்லுந‌ர்கள்.

Share